உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி வர்த்தகத் தளமான பினான்ஸ் (Binance), தனது தளத்தில் பாதுகாப்பு மீறல் அல்லது சைபர் தாக்குதல் இடம்பெற்றிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
“Binance தளத்தின் மீது ஹேக்கிங் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது” என அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும் தற்போதைய முக்கிய பங்குதாரருமான சாங்பெங் ஜாவோ தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்தேகத்திற்குரிய சைபர் தாக்குதலைத் தொடர்ந்து சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் (2.7 பில்லியன் யூரோ) பெறுமதியான கிரிப்டோகரன்சி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பயனர்களின் நிதி முழுமையாகப் பாதுகாப்பாக இருப்பதாக Binance நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும், ஹேக்கிங் தாக்குதலால் ஏற்படும் அனைத்து இழப்புகளையும் Binance நிறுவனம் பொறுப்பேற்கும் என அதன் இணை நிறுவனர் யி ஹே தெரிவித்துள்ளார். எனினும், சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்களை அவர் வெளியிடவில்லை.
சந்தேகத்திற்குரிய பாதுகாப்பு மீறலின் முழுமையான தன்மை மற்றும் அதன் பாதிப்புகள் தொடர்பான விபரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. அத்துடன், கிரிப்டோகரன்சி நிதிகள் ஏதேனும் திருடப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் Binance நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை.
இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தமது பாதுகாப்புக் குழுக்கள் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் அவசரமாக ஆய்வு செய்து வருவதாகவும், உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்தவுடன் உத்தியோகபூர்வ தகவல் வழிகள் ஊடாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினசரி கிரிப்டோகரன்சி வர்த்தக அளவின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய தளமாக விளங்கும் Binance, பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சில வர்த்தகப் பொருட்களுக்கான பரிவர்த்தனைகளையும் இடைநிறுத்தியுள்ளது.
இந்த நிலையில், Binance தளத்தைப் பயன்படுத்தும் ஏனைய கிரிப்டோகரன்சி நிறுவனங்களும் தமது நாணயங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
Tether நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பாவ்லோ ஆர்டொய்னோ வெளியிட்ட தகவலின்படி, சுமார் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான USDT நாணயங்கள் முடக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, Circle நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெரமி அலெய்ர் தெரிவித்த தகவலின்படி, சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான USDC நாணயங்களும் முடக்கப்பட்டுள்ளன.
2017ஆம் ஆண்டு Binance தளத்தை நிறுவிய சாங்பெங் ஜாவோ, 2023ஆம் ஆண்டு தனது தளத்தில் பணமோசடியைத் தடுப்பதற்குத் தவறிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து விலகினார்.
2025ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவருக்கு மன்னிப்பு வழங்கியிருந்தார்.
இந்தச் சைபர் தாக்குதல் குறித்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை மாலை Bitcoin நாணயத்தின் பெறுமதி 3.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து, 79,000 அமெரிக்க டொலருக்கும் கீழ் சென்றுள்ளது.
இதற்கிடையில், பயனர்களின் அனைத்து நிதிகளும் முழுமையாகப் பாதுகாக்கப்படும் எனத் தாம் பங்குதாரர் என்ற அடிப்படையில் எதிர்பார்ப்பதாக சாங்பெங் ஜாவோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய கிரிப்டோகரன்சி முயற்சிகளுக்கு சாங்பெங் ஜாவோவும் Binance நிறுவனமும் முக்கிய ஆதரவாளர்களாகச் செயற்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










