உலகப் புகழ்பெற்ற அறிவியல் புனைகதைத் தொலைக்காட்சித் தொடரான ‘ஸ்டார் ட்ரெக்’ (Star Trek) இல் கெப்டன் ஜீன்-லூக் பிக்கார்ட் (Captain Jean-Luc Picard) கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த பிரித்தானிய நடிகரும் இயக்குநருமான பெட்ரிக் ஸ்டீவர்ட் (Patrick Stewart) தனது 86ஆவது வயதில் காலமானார்.
அல்சைமர் நோய் மற்றும் லூயி பாடி டிமென்ஷியா (Lewy body dementia) ஆகிய பாதிப்புகளுடன் குறுகிய காலம் போராடிய நிலையில், வியாழக்கிழமை அவர் உயிரிழந்ததாக அவரது உத்தியோகபூர்வ சமூக ஊடகக் கணக்குகள் ஊடாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் மிர்ஃபீல்ட் (Mirfield) என்ற சிறிய கிராமத்தில் பிறந்த அவர், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் லொஸ் ஏஞ்சல்ஸில் தனது நடிப்புப் பயணத்தின் மூலம் சர்வதேசப் புகழைப் பெற்றார்.
தனது 47ஆவது வயதில் ‘ஸ்டார் ட்ரெக்: தி நெக்ஸ்ட் ஜெனரேஷன்’ (Star Trek: The Next Generation) தொடரில் கெப்டன் ஜீன்-லூக் பிக்கார்ட் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். இதன் மூலம் முன்னதாக வில்லியம் ஷட்னர் நடித்திருந்த புகழ்பெற்ற கெப்டன் ஜேம்ஸ் டி. கிர்க் கதாபாத்திரத்தின் தொடர்ச்சியாக, புதிய தலைமுறை ரசிகர்களிடையே தனித்துவமான இடத்தைப் பிடித்தார்.
அமைதியான அணுகுமுறை, நிதானமான பேச்சு மற்றும் தனித்துவமான பிரித்தானிய உச்சரிப்பு ஆகியவற்றுடன் அவர் உருவாக்கிய பிக்கார்ட் கதாபாத்திரம், விரைவிலேயே ரசிகர்களின் விருப்பத்துக்குரியதாக மாறியது. பல தசாப்தங்களுக்குப் பின்னர் ‘ஸ்டார் ட்ரெக்: பிக்கார்ட்’ என்ற தனித் தொடரிலும் மீண்டும் அதே கதாபாத்திரத்தில் நடித்தார். அந்தத் தொடர் 2023ஆம் ஆண்டு நிறைவடைந்தது.
கற்பனை விண்வெளி உலகில் எண்டர்பிரைஸ் விண்கலத்தின் தலைவராக அவர் நடித்த கதாபாத்திரம், புதிய உலகங்களை ஆராய்வது, புதிய உயிரினங்களையும் நாகரிகங்களையும் கண்டறிவது என்ற இலட்சியத்தைக் கொண்டிருந்தது.
இந்நிலையில், தனது 86ஆவது வயதில் அவர் மறைந்துள்ளமை உலகத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.










