இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு தரப்பும் தெளிவான வெற்றியைப் பெறாத நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரிக் கூட்டணி ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறத் தவறியுள்ளதாக ஆரம்பகட்ட தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
சுமார் 90 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், 120 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் (Knesset) நெதன்யாகுவின் கூட்டணி 53 ஆசனங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் இராணுவத் தளபதி காடி ஐசன்கோட் தலைமையிலான எதிரணிக் கூட்டணி 48 ஆசனங்களைப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அரபுக் கட்சிகள் 19 ஆசனங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெறுபேறாகக் கருதப்படுகிறது. அடுத்த அரசாங்கத்தைத் தீர்மானிப்பதில் இந்தக் கட்சிகள் குறிப்பிடத்தக்க பங்காற்றக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
இஸ்ரேலில் நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பெறுவதற்கு குறைந்தது 61 ஆசனங்கள் அவசியமாகும். இதனால், பிரதான இரு கூட்டணிகளும் தனித்துச் சுயமாக ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நெதன்யாகுவின் லிகுட் கட்சி அவரது கூட்டணியில் அதிக ஆசனங்களைக் கொண்ட கட்சியாகத் தொடர்கிறது. மறுபுறம், ஐசன்கோட்டின் யஷார் கட்சி எதிரணிக் கூட்டணியில் முன்னிலை வகிக்கிறது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலின் முடிவுகள், ஆட்சியமைப்பதற்குத் தேவையான ஆதரவைத் திரட்டுவதில் அரசியல் தலைவர்கள் ஈடுபட வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளன. இதனால், கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நீண்டகாலம் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரபுக் கட்சிகள் பெற்றுள்ள குறிப்பிடத்தக்க ஆதரவு, ஆட்சியமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனினும், அந்தக் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் நிலவும் கருத்து வேறுபாடுகள் முக்கிய தடையாக உள்ளன.
இராணுவத்தினர் மற்றும் இராஜதந்திரிகள் அளித்த வாக்குகள் உள்ளிட்ட எஞ்சிய வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருவதால், இறுதி முடிவுகள் இந்த வாரத்தின் பிற்பகுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதி முடிவுகள் வெளியான பின்னர், இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சொக் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, அரசாங்கத்தை அமைப்பதற்கான பொறுப்பை எந்தத் தலைவருக்கு வழங்குவது என்பது குறித்து தீர்மானிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தச் செயற்பாடுகள் நிறைவடையும் வரை பெஞ்சமின் நெதன்யாகு இடைக்காலப் பிரதமராகத் தொடர்வார், என தெரிவிக்கப்படுகின்றது










