எரிவாயுவைப் பதுக்குதல், விற்பனையைக் கட்டுப்படுத்துதல் அல்லது அங்கீகரிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் முகவர்களுக்கு எதிராக, விநியோகஸ்தர் உரிமத்தை இரத்துச் செய்வது உள்ளிட்ட கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில்,
எரிவாயுவைப் பதுக்குதல், விற்பனையைக் கட்டுப்படுத்துதல், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதலாக அறவிடுதல் அல்லது அனுமதியற்ற மேலதிக கட்டணங்களை விதித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அனைத்து லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர்களுக்கும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவுறுத்தல்களைப் புறக்கணிக்கும் அல்லது மீறும் விநியோகஸ்தர்களுக்கு எதிராகக் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவைப்படின் அவர்களது விநியோகஸ்தர் உரிமம் இரத்துச் செய்யப்படும் என்றும் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
நுகர்வோர் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விலையில் தடையின்றி லிட்ரோ எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.










