இஸ்ரேல் பொதுத் தேர்தலின் இறுதி முடிவுகளின்படி, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி எதிர்க்கட்சிகளை விட முன்னிலை பெற்றுள்ள போதிலும், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறத் தவறியுள்ளது. இதனால் கடினமான கூட்டணி பேச்சுவார்த்தைகள் அல்லது மீண்டும் தேர்தல் நடத்தப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை வெளியான இறுதி முடிவுகளின்படி, நெதன்யாகுவின் வலதுசாரி மற்றும் தீவிர வலதுசாரிக் கட்சிகளைக் கொண்ட கூட்டணி, இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டின் 120 ஆசனங்களில் 53 ஆசனங்களைப் பெற்றுள்ளது. அவரது லிகுட் கட்சி 27 ஆசனங்களுடன் மிகப்பெரிய தனிக் கட்சியாகத் தொடர்கிறது.
மத்தியவாதியான காடி ஐசன்கொட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி 48 ஆசனங்களைப் பெற்றுள்ளது. இதேவேளை, அரபுக் கட்சிகளான ராம் (Raam) மற்றும் கூட்டுப் பட்டியல் (Joint List) ஆகியவை இணைந்து 19 ஆசனங்களைப் பெற்றுள்ளன. இதன் மூலம், ஆட்சி அமைப்பதில் தீர்மானிக்கும் சக்திகளாக அவை உருவெடுத்துள்ளன.
எந்தவொரு கூட்டணிக்கும் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 61 ஆசனங்கள் கிடைக்காத நிலையில், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் பல வாரங்கள் நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் மீண்டும் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பும் காணப்படுகிறது.
அரபு-இஸ்ரேலியக் கட்சிகள் தேர்தலில் செல்வாக்குச் செலுத்துவதற்காக வெளிநாட்டு நிதியைப் பெற்றதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நெதன்யாகுவின் ஆதரவாளர்கள் வியாழக்கிழமை முன்வைத்ததைத் தொடர்ந்து இந்த இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. எனினும், அந்தக் குற்றச்சாட்டுகளை அரபுக் கட்சிகளின் இரு கூட்டணிகளும் கட்டாரும் நிராகரித்துள்ளன.
இஸ்ரேலின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவான ஷின் பெத், தேர்தலில் இடம்பெற்றிருக்கக்கூடிய முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதாகத் தெரிவித்துள்ளது. அதேவேளை, ஜனநாயக மற்றும் சட்டபூர்வமான முறையில் வாக்களித்த ஒரு முழுச் சமூகத்தின் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்துவதோ அல்லது குற்றம் சுமத்துவதோ விசாரணையின் நோக்கமல்ல என்றும் அந்தப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
தேர்தல் முடிவுகள் தொடர்பான பதற்றத்தைத் தணிக்கும் வகையில், பரவலான முறைகேடுகள் இடம்பெற்றதாகக் கூறப்படுவதற்கு எந்தவித அடிப்படையும் இல்லை என தேர்தல் ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் டீன் லிவ்னே தெரிவித்துள்ளார்.
அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்திய குற்றச்சாட்டுகள்
கட்டாரிடமிருந்து ராம் கட்சி நிதி பெற்றதாகவும், அந்த நிதி வாக்குகளை வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளே இந்தச் சர்ச்சையின் மையமாக உள்ளன. ஹமாஸ் அமைப்புடன் தொடர்புகளைப் பேணும் கட்டார், எரிசக்தி வளம் மிக்க வளைகுடா நாடாகும்.
“ராம் கேட் (Raamgate) ஊழல் ஒரு அரசியல் பூகம்பமாகும். இஸ்ரேலின் தேர்தல் திருடப்பட்டுள்ளது” என நெதன்யாகுவின் லிகுட் கட்சி வியாழக்கிழமை தெரிவித்திருந்தது.
எனினும், ராம் கட்சியின் தலைவர் மன்சூர் அப்பாஸ் எந்தவொரு தவறும் இடம்பெறவில்லை என மறுத்ததுடன், விசாரணைக்கும் வரவேற்புத் தெரிவித்துள்ளார். அரபு வாக்காளர்களின் அரசியல் செல்வாக்கு அதிகரித்து வருவதால் அச்சமடைந்த நெதன்யாகுவும் அவரது ஆதரவாளர்களும் தூண்டுதல்களை ஏற்படுத்தும் பிரசாரத்தில் ஈடுபடுவதாக கூட்டுப் பட்டியல் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையில் இதுவரை அரசாங்க அதிகாரிகள் எந்தவொரு ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை.
ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெறத் தவறியதால், தேர்தல் முடிவுகள் மீதான நம்பிக்கையைச் சீர்குலைக்க நெதன்யாகு முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
“அவர் தேர்தல் முடிவுகளைச் சவாலுக்கு உட்படுத்த முயற்சிக்கிறார்” என இடதுசாரி வேட்பாளர் யாயிர் கோலன் தெரிவித்துள்ளார்.
ஷின் பெத் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து தமக்கு விளக்கமளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட ஐசன்கொட், “உண்மையில் என்ன நடந்தது, அல்லது ஏதாவது நடந்ததா என்பதைப் புரிந்துகொள்வதற்கு இது மிகவும் ஆரம்பமான கட்டமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
எனினும், லிகுட் கட்சியும் நெதன்யாகுவும் தேர்தல் முடிவுகளைச் சட்டபூர்வமற்றதாக்கும் நோக்கில் ஒருங்கிணைந்த பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளமை ஏற்கனவே தெளிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு நெதன்யாகுவின் இரண்டு உதவியாளர்கள் வளைகுடா நாடான கட்டாரிடமிருந்து பணம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நெதன்யாகு நீண்டகாலமாக கட்டார் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகின்றார்.
தற்போதைய குற்றச்சாட்டுகளை “அபத்தமானவை மற்றும் ஆபத்தானவை” என கட்டார் நிராகரித்துள்ளது.
இஸ்ரேலின் நீண்டகாலம் பதவி வகித்த பிரதமரான நெதன்யாகு, காசாவில் ஸ்திரத்தன்மையைப் பேணும் நோக்கில் ஹமாஸ் அமைப்புக்கு கட்டார் நிதியுதவி வழங்குவதை பல ஆண்டுகளாக மறைமுகமாக ஆதரித்து வந்தார். எனினும், 2023 ஒக்டோபர் 7ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களுக்குப் பின்னர் அந்த அணுகுமுறை முறிவடைந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.










