சமீபத்திய எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து பேருந்து மற்றும் பாடசாலை வேன் போக்குவரத்துக் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முச்சக்கர வண்டிக் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் அதன் சங்கங்கள் மாறுபட்ட கருத்துகளை வெளியிட்டுள்ளன.
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கருத்துத் தெரிவிக்கையில், பேருந்து கட்டணத் திருத்தத்திற்கான சூத்திரத்தின்படி எரிபொருள் விலை அதிகரிப்பு 4 சதவீதத்தை எட்டாததால் பேருந்து கட்டணங்களை அதிகரிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய விலைத் திருத்தங்களின் அடிப்படையில் டீசல் விலை லீற்றருக்கு 15 ரூபாவால் அதிகரித்துள்ள போதிலும், நடைமுறையிலுள்ள கட்டணத் திருத்தச் சூத்திரத்தின்படி பேருந்து கட்டண அதிகரிப்பை மேற்கொள்வதற்குப் போதுமானதாக அது அமையவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், பஸ் போக்குவரத்துத் துறை தொடர்ந்தும் நட்டத்தில் இயங்குவதாகத் தெரிவித்த அவர், குறுகிய தூர சேவைகளில் நாளொன்றுக்கு சுமார் 1,000 ரூபாவும், நீண்ட தூர சேவைகளில் சுமார் 2,000 ரூபாவும் நட்டம் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும் பாடசாலை வேன் போக்குவரத்துக் கட்டணங்களில் மாற்றம் செய்யப்படமாட்டாது என பாடசாலை வேன் போக்குவரத்துச் சங்கங்களும் தெரிவித்துள்ளன.
ஆனால், முச்சக்கர வண்டிக் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் அதன் சங்கங்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.
தேசிய ஐக்கிய முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் கைத்தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா, அதிகரித்து வரும் எரிபொருள் செலவைக் கருத்திற்கொண்டு முச்சக்கர வண்டிக் கட்டணங்களும் திருத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, முதல் கிலோமீற்றருக்கான கட்டணத்தை 110 ரூபாவிலிருந்து 120 ரூபாவாகவும், அடுத்தடுத்த ஒவ்வொரு கிலோமீற்றருக்குமான கட்டணத்தை 90 ரூபாவிலிருந்து 100 ரூபாவாகவும் அதிகரிக்க அவர் முன்மொழிந்துள்ளார்.
இந்த முன்மொழிவை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்து, அடுத்துவரும் நாட்களில் அதன் பதிலுக்காகக் காத்திருக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கட்டண மீட்டர் திருத்தச் சேவை வழங்குநர்களுடன் கலந்துரையாடி கட்டணங்களை மாற்றுவது தொடர்பில் தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
எனினும், ஏனைய சில முச்சக்கர வண்டி சங்கங்கள் உடனடியாகக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்து, கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.










