சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான அனோஜன் சிவராசாவுக்கு ஆதரவாக, அந்தத் தண்டனைக்கு எதிரான மேன்முறையீடு நேற்று ஞாயிற்றுக்கிழமை சவூதி அரேபிய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் சவூதி அரேபிய சட்டத்தரணிகள் இணைந்து மேற்கொண்ட முயற்சிகளைத் தொடர்ந்து இந்த மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் குழுவுக்கும் சவூதி அரேபிய சட்டத்தரணிகளுக்கும் இடையில் பலகட்ட ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர், சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாடின் ஒருங்கிணைப்புடன் மேன்முறையீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்ட நடவடிக்கைகள் ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இறைத்தூதர் முஹம்மது நபியை அவமதிப்பதாகக் கருதப்பட்ட சமூக ஊடகப் பதிவு ஒன்றை வெளியிட்ட குற்றச்சாட்டில், அனோஜன் சிவராசாவுக்கு சவூதி அரேபிய மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.
இதற்கு முன்னதாக, கீழ் நீதிமன்றம் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. எனினும், அதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், முந்தைய தீர்ப்பை மாற்றியமைத்து மரண தண்டனையை விதித்தது.
இதனையடுத்து, மேன்முறையீட்டைத் தயாரிப்பதற்கான சட்ட உதவிகளை வழங்கும் நோக்கில் இலங்கையைச் சேர்ந்த விசேட சட்டத்தரணிகள் குழுவொன்று சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்தது.
இந்தக் குழுவில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அசார்ட் நவாவி, ஜனாதிபதி சட்டத்தரணிகளான பைசர் முஸ்தபா மற்றும் உபுல் குமாரப்பெரும, சட்டத்தரணி ஹபீல் பரீஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
மேலும், இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாட், ஜெத்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின் அதிகாரி நீதிபதி மொஹமட் லாபிர் மற்றும் சில்மி ரியாஸ்தீன் ஆகியோரும் சட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதில் பங்களித்துள்ளனர்.










