குவைத்தில் தனது முதலாளியின் குடும்ப உறுப்பினர்களை வாகனத்தில் ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் எனப்படும் போதைப்பொருளைக் கடத்தியதாகக் கூறப்படும் இலங்கை சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குவைத் உள்துறை அமைச்சை மேற்கோள்காட்டி குவைத் டைம்ஸ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. பார்வானியா ஆளுநரக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து, அல் அர்தியா பகுதியில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்காணிப்பு கமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, குடும்பச் சாரதியாகப் பணியாற்றிய குறித்த இலங்கையர், தனது கடமைகளை நிறைவேற்றும் அதேவேளை போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து, பொலிஸார் அவரை இடைமறித்துச் சோதனையிட்டபோது கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் அடங்கிய பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது முதலாளியின் ஒத்துழைப்புடன், அவர் தங்கியிருந்த அறையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது, 469.1 கிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன், 0.7 கிராம் கஞ்சா, இலத்திரனியல் எடைமானி மற்றும் 285.950 குவைத் தினார் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் உள்ள நபர்களுக்குக் குறித்த சந்தேகநபர் மொத்தமாக 6,573 குவைத் தினார் பணப் பரிமாற்றங்களை மேற்கொண்டமைக்கான நிதிப் பதிவுகளையும் விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
விநியோகிப்பதற்காகவே போதைப்பொருட்களைத் தம்வசம் வைத்திருந்ததாகவும், குவைத்துக்கு வெளியே உள்ள ஒருவருடன் இணைந்து போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்ததாகவும் சந்தேகநபர் விசாரணைகளின்போது ஒப்புக்கொண்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
வீட்டுப் பணியாளர்கள், வீட்டு வாகனங்கள் மற்றும் குடியிருப்புகளைச் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், முதலாளிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என குவைத் உள்துறை அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.










