சீனாவுக்காக பதிவு செய்யப்படாத வெளிநாட்டு முகவராக செயற்பட்டதாகவும், தாய்வான் ஜனாதிபதி லாய் சிங்-தேவின் மகன் மற்றும் அவரது குடும்பத்தினரை கண்காணித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்ட 34 வயதான கலிபோர்னியா பெண் ஒருவரை அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI கைது செய்துள்ளது.
கலிபோர்னியாவின் இர்வின் நகரைச் சேர்ந்த வான்யிங் “ஹீதர்” சாங் என்பவரே நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டு சியாட்டிலுக்குச் சென்ற அவர், தாய்வான் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவரின் நெருங்கிய உறவினரை கண்காணித்ததாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை கையெழுத்திடப்பட்ட குற்றப்பத்திரிகையின்படி, பெயர் குறிப்பிடப்படாத குறித்த உறவினர் தொடர்பான தகவல்களை சேகரித்து, அவர்களது புகைப்படங்களை எடுக்குமாறு சீன அதிகாரிகள் சாங்கிற்கு அறிவுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது. தாய்வான் ஜனாதிபதியின் மகனையும் அவரது குடும்பத்தினரையும் சாங் கண்காணித்து வந்ததாக FBI தெரிவித்துள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ள சீனா, தாய்வானை தனது பிரதேசத்தின் ஒரு பகுதியாகக் கருதுகிறது. எனினும், தாய்வானை சீனா ஒருபோதும் ஆட்சி செய்ததில்லை. தாய்வானை சீனாவுடன் ஒன்றிணைக்க நீண்டகாலமாக சீனா வலியுறுத்தி வருவதுடன், தேவை ஏற்பட்டால் பலத்தைப் பயன்படுத்தவும் தயார் என தெரிவித்து வருகிறது.
சுமார் 24 மில்லியன் மக்கள் வசிக்கும் சுயாட்சி ஜனநாயக நாடான தாய்வானின் இறையாண்மையை வலியுறுத்தி வரும் ஜனாதிபதி லாய் சிங்-தே மீது சீனா தொடர்ந்து கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. சீன அரசாங்கமும் அரச ஊடகங்களும் அவரை ஆபத்தான பிரிவினைவாதி, பிரச்சினைகளை உருவாக்குபவர் மற்றும் போரைத் தூண்டுபவர் என விமர்சித்து வருகின்றன.
2025 செப்டம்பர் 1ஆம் திகதி சாங் மற்றும் “தனிநபர் 1” என குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றொருவரும் லாஸ் வேகாஸிலிருந்து சியாட்டிலுக்கு விமானத்தில் சென்றதாக FBI சிறப்பு முகவர் கெவின் ஹோல்ட் தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர்கள் வாடகைக்கு எடுத்த கறுப்பு நிற SUV வாகனத்தில் குறித்த நபரின் வீட்டுக்கு வெளியே காத்திருந்ததாக அயல்வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமரா காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நபரும் அவரது குடும்பத்தினரும் வீட்டுக்கு வந்தபோது, சாங் மற்றும் அந்த மற்றைய நபரும் வாகனத்துக்குள் இருந்து தங்களது தொலைபேசிகளை எடுத்து, குடும்பத்தினரை புகைப்படம் அல்லது காணொளி எடுத்ததாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்வான் ஜனாதிபதியின் நெருங்கிய உறவினர்களின் இருப்பிடங்கள், அவர்களது வீடுகள் மற்றும் வாகனங்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்கள், எதிர்காலத்தில் ஏதேனும் மோதல் ஏற்பட்டால் தாய்வான் ஜனாதிபதி மீது அழுத்தம் கொடுப்பதற்கு சீன அரசாங்கத்துக்கு பயனுள்ளதாக இருக்கக்கூடும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (CNN)










