அரசைப் பாதுகாப்பதற்கான பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் (PSTA) நாளை செவ்வாய்க்கிழமை முதலாம் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலின்படி, பொது அலுவல்கள் ஆரம்பிக்கும்போது நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
இலங்கையின் தேசிய பாதுகாப்பையும் மக்களையும் பயங்கரவாதச் செயல்கள், பயங்கரவாதம் தொடர்பான குற்றங்கள் மற்றும் நாட்டிற்குள்ளும் வெளியிலும் மேற்கொள்ளப்படும் பயங்கரவாதமாக வரையறுக்கப்பட்ட குறிப்பிட்ட செயல்களில் இருந்து பாதுகாப்பதே இந்த சட்டமூலத்தின் நோக்கமாகும்.
அத்துடன், நாட்டிற்கு வெளியே பயங்கரவாத நடவடிக்கைகளைத் தயாரிப்பதற்காக இலங்கைப் பிரதேசமும் மக்களும் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாதச் செயல்கள் அல்லது பயங்கரவாதம் தொடர்பான பிற குற்றங்களை மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டப்படும் நபர்களைக் கண்டறிதல், அடையாளம் காணுதல், கைது செய்தல், தடுப்புக் காவலில் வைத்தல், விசாரணை நடத்துதல், வழக்குத் தொடருதல் மற்றும் தண்டனை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பான பல்வேறு ஏற்பாடுகளும் சட்டமூலத்தில் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை இரத்துச் செய்வதற்கான ஏற்பாடும் இந்த சட்டமூலத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் ஒக்டோபர் 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை கூடவுள்ளது.










