பெலவத்தை பகுதியில் விலங்கொன்றை கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படும் நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான காட்சிகள் அருகிலுள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளன.
கடந்த சனிக்கிழமை அதிகாலை 2.10 மணியளவில் பெலவத்தை பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டியில் பயணித்த சிலரும் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருகிலுள்ள வீட்டின் சிசிடிவி காட்சிகளில், முச்சக்கரவண்டியில் இருந்து இறங்கிய ஒருவர் காயமடைந்த நிலையில் காணப்பட்ட முள்ளம்பன்றியை வீதியோர வடிகாலுக்குள் வீசியதாக பதிவாகியுள்ளது.
பின்னர் குறித்த நபர் அந்த விலங்கை மீண்டும் வீதிக்கு இழுத்து வந்து, கம்பு ஒன்றினால் தாக்கியதுடன், பின்னர் அதனை அங்கிருந்து இழுத்துச் சென்றதாகவும் காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் CIB 01 137/31 என்ற குறிப்பு இலக்கத்தின் கீழ் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சிசிடிவி காட்சிகளில் காணப்படும் நபரை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த நபரை அடையாளம் காணும் பொதுமக்கள் அல்லது சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் சட்ட அமுலாக்கப் பிரிவை 011 2888585 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பந்தப்பட்ட முறைப்பாட்டு இலக்கத்தை குறிப்பிட்டு பொலிஸாருக்கும் தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.










