அவுஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதி நகரமான நியூகாஸிலில் ரக்பி லீக் ஆதரவாளர்கள் கூட்டத்திற்குள் கார் ஒன்று மோதியதில் மூன்று சிறுவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில் வாகனத்தை ஓட்டிச் சென்ற 18 வயதான இளைஞரைக் கைது செய்துள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞர் இந்திகா பாம்ப்ரிக் சமரசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களில் 5 வயதுச் சிறுமி மற்றும் 67 வயது முதியவர் ஆகிய இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், ஏனைய 8 பேர் சீரான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு முன்னர் உள்ளூர் ரக்பி அணியான ‘நியூகாஸில் நைட்ஸ்’ வீரர்களை வழியனுப்புவதற்காக மக்கள் திரண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அத்துடன் இந்த விபத்து பயங்கரவாதத்துடன் தொடர்புடையது அல்ல எனத் தெரிவித்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், சமரசிங்கின் சாரதி அனுமதிப்பத்திரம் கடந்த பெப்ரவரி மாதம் இடைநிறுத்தப்பட்டிருந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த இடைநிறுத்தத்துக்கு எதிராக ஏப்ரல் மாதம் அவர் மேன்முறையீடு செய்திருந்த போதிலும், அது நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










