வெரஹெர பகுதியில் சுமார் ஒன்றரை வருடங்களாக, போலியான தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படும் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெரஹெர, ஜனதா மாவத்தை பகுதியைச் சேர்ந்த, 49 வயதுடைய கணவரும் 43 வயதுடைய அவரது மனைவியும், நேற்று ஞாயிற்றுக்கிழமை, கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருந்த நபர் ஒருவர் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெரஹெர, ஜனதா மாவத்தை பகுதியில் வைத்து குறித்த தம்பதியினர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து போலியான தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளில், சந்தேகநபர்கள் சுமார் ஒன்றரை வருடங்களாக போலியான தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து பணத்திற்கு விற்பனை செய்து வந்ததாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.










