இலங்கை விஞ்ஞானி ஒருவரின் தலைமையிலான ஆய்வுக் குழு, அமெரிக்காவில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பயன்படுத்தப்படாத தாவரக் கழிவுகளைப் (மக்காச்சோளத் தாவரக் கழிவுகள்) பயன்படுத்தி புரதச்சத்து நிறைந்த, உண்ணக்கூடிய 3D அச்சிடப்பட்ட பிஸ்கட்டுகளை உருவாக்கியுள்ளது.
நாசாவின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் ஆய்வின் ஒரு பகுதியாக இந்த புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
Southern Illinois University Carbondale பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இலங்கை நுண்ணுயிரியல் விஞ்ஞானி கலாநிதி லஹிரு ஜயகொடி தலைமையிலான ஆய்வுக் குழுவே இந்த ஆய்வை முன்னெடுத்துள்ளது. கழிவுப் பொருட்களில் இருந்து பெறப்படும் மூலப்பொருட்களை நுண்ணுயிரிகளின் உதவியுடன் ஊட்டச்சத்து நிறைந்த உயிர்த்திரளாக மாற்றி, அதனைப் பயன்படுத்தி பிஸ்கட்டுகளை தயாரிப்பதே இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையாகும்.
“µBites” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பிஸ்கட்டுகளை தயாரிக்க பொதுவாக குடிநீர் மற்றும் குளிர்பான போத்தல்களில் பயன்படுத்தப்படும் Polyethylene Terephthalate (PET) பிளாஸ்டிக்குடன், பயன்படுத்தப்படாத சோளத் தாவரப் பகுதிகள் மற்றும் ஏனைய உயிரியல் கழிவுகள் பயன்படுத்தப்படுகின்றன.
முதற்கட்டமாக, பிளாஸ்டிக் மற்றும் தாவரக் கழிவுகள் நீர் மற்றும் ஒக்சிஜனுடன் அதிக வெப்பநிலை மற்றும் அழுத்தத்தின் கீழ் இணைக்கப்படும் “Oxidative Hydrothermal Dissolution” என்ற தொழில்நுட்பத்துக்கு உட்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் கழிவுகள் நுண்ணுயிரிகளால் உட்கொள்ளக்கூடிய சிறிய மூலக்கூறுகளாக உடைக்கப்படுகின்றன.
அதன் பின்னர் விசேடமாக தயாரிக்கப்பட்ட பாக்டீரியா அல்லது ஈஸ்ட் வகைகள் அந்த மூலப்பொருட்களுடன் சேர்க்கப்படுகின்றன. இந்த நுண்ணுயிரிகள் கழிவுகளில் இருந்து பெறப்பட்ட பொருட்களை உட்கொண்டு, புரதங்கள், கொழுப்புகள் மற்றும் அத்தியாவசிய சர்க்கரைகளைக் கொண்ட ஊட்டச்சத்து நிறைந்த உயிர்த்திரளாக மாற்றுகின்றன.
பின்னர் பெறப்படும் இந்த கலவை நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் சுவையூட்டிகளுடன் கலக்கப்பட்டு 3D உணவு அச்சுப்பொறிக்குள் செலுத்தப்படுகிறது. கலவை அடுக்கு அடுக்காக பிஸ்கட் வடிவில் அச்சிடப்பட்டு, பின்னர் சுடப்பட்டு உண்ணக்கூடிய திடப்பொருளாக மாற்றப்படுகிறது.
தற்போதைய நிலையில் “µBites” தயாரிப்பதற்கான செலவு ஒரு கிலோகிராமுக்கு சுமார் 60 அமெரிக்க டொலராக மதிப்பிடப்பட்டுள்ளது.
நீண்டகால விண்வெளிப் பயணங்கள், குறிப்பாக எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்துக்கு மேற்கொள்ளப்படக்கூடிய பயணங்கள், இந்த தொழில்நுட்பத்தின் முக்கிய பயன்பாடுகளில் ஒன்றாக இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். விண்வெளி வீரர்களுக்கு நீண்டகாலத்துக்கு போதுமான உணவு இருப்பை பராமரிப்பது எதிர்கால விண்வெளிப் பயணங்களில் முக்கிய சவாலாக உள்ளது.
விண்கலங்களில் உருவாகும் பிளாஸ்டிக் பொதிகள் உள்ளிட்ட பொருத்தமான கழிவுகளை மீள்செயலாக்கி, அவற்றிலிருந்து ஊட்டச்சத்து நிறைந்த உணவை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களாக மாற்றுவதற்கு இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் உதவக்கூடும்.
விண்வெளி ஆராய்ச்சிக்கு அப்பால், வழக்கமான உணவு விநியோகத்தைப் பெறுவதில் சிரமம் காணப்படும் சூழல்களிலும் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதற்கு பயன்பாடுகள் இருக்கக்கூடும்.
2050ஆம் ஆண்டை நோக்கி உலகளாவிய உணவுத் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், எதிர்கால உணவுப் பாதுகாப்பு சவால்களுக்கும் இந்த தொழில்நுட்பம் பங்களிக்கக்கூடும் என கலாநிதி லஹிரு ஜயகொடி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் மூலம் பிளாஸ்டிக் மாசுபாடு மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை என உலகம் எதிர்கொள்ளும் இரண்டு முக்கிய சவால்களுக்கும் ஒரே நேரத்தில் தீர்வை வழங்கக்கூடிய புதிய அணுகுமுறையாக இந்த ஆய்வு அமையக்கூடும்.
மனிதர்களை உள்ளடக்கிய மேலதிக பரிசோதனைகள் நிறுவன ரீதியான அனுமதிகளுக்கு உட்பட்டு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், இந்த பிஸ்கட்டுகள் இனிமையான மணத்தைக் கொண்டிருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.










