துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி பயணித்த FZ 1073 விமானத்தில் செப்டெம்பர் 30-ஆம் திகதி ஏற்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, விமானத்தில் இருந்த 172 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக ஃப்ளைடுபாய் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஃப்ளைடுபாய் தலைமை நிறைவேற்று அதிகாரி காயித் அல் காயித் வெளியிட்ட அறிக்கை, துபாய் ஊடக அலுவலகம் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.
விமானத்தின் கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, விமானம் சவுதி அரேபியாவின் தபூக் நகருக்கு திருப்பி விடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
விமானத்தின் தலைமை விமானி தற்போது மருத்துவ அனுமதியைப் பெற்று ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு திரும்பியுள்ளதாகவும், சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விமான நிறுவனம் தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமானத்தை பாதுகாப்பாகக் கட்டுப்படுத்தி தரையிறக்கிய தலைமை விமானி உள்ளிட்ட விமானிகளையும், விமானப் பணியாளர்களையும் அல் காயித் பாராட்டியுள்ளார். மேலும், சம்பவத்தின்போது விமானப் பணியாளர்களுக்கு உதவிய பயணிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
விமானம் திசைதிருப்பப்பட்டதைத் தொடர்ந்து வழங்கிய அவசர நடவடிக்கை மற்றும் உதவிகளுக்காக சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அதிகாரிகளுக்கும் ஃப்ளைடுபாய் நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.
அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய, டெல் அவிவுக்கான விமான சேவைகள் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான உத்தியோகபூர்வ விசாரணை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கு ஃப்ளைடுபாய் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் அல் காயித் தெரிவித்துள்ளார்.
விமானத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பாக பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில், உண்மைகளை உறுதிப்படுத்தும் வகையில் உத்தியோகபூர்வ விசாரணை நிறைவடையும் வரை காத்திருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
விமானத்தின் கட்டுப்பாட்டு அறைக்குள் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலதிக விபரங்களை ஃப்ளைடுபாய் நிறுவனம் வெளியிடவில்லை. விசாரணையின் மூலம் உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதே இதற்கான காரணம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.










