கொழும்பு துறைமுக நகரத் திட்டத்திற்குள் நுழையும் நபர்களுக்கு இதுவரை 14,300 இற்கும் மேற்பட்ட விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற அரசாங்க நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே (COPF) இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்போது, துறைமுக நகரத் திட்டத்திற்குள் நுழையும் நபர்களுக்கான விசா நடைமுறைகள், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள், திட்டத்திற்குள் நுழையும் நபர்களுக்கு வழங்கப்படும் விசாக்கள் மற்றும் குடிவரவு அனுமதிகள் தொடர்பான நடைமுறைகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கோரியுள்ளனர்.
துறைமுக நகரத்திற்குள் நுழையும் ஒவ்வொரு நபரும் நாட்டை வந்தடைந்த பின்னர் கண்காணிக்கப்படுகிறார்களா, அத்துடன் தமது ஆவணங்களை முறைப்படுத்துவதற்காக நடைமுறையில் உள்ள 30 நாள் காலப்பகுதிக்குள் தேவையான நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்கிறார்களா எனக் குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அதிகாரிகள், ஒவ்வொரு நபரையும் நிகழ்நேர அடிப்படையில் தனித்தனியாகக் கண்காணிப்பதற்குப் பதிலாக, குறிப்பிட்ட கால இடைவெளிகளில், குறிப்பாக மாதாந்த அறிக்கைகள் மூலமே கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
14,000 இற்கும் மேற்பட்ட விசா பெற்றவர்களின் நடமாட்டம் மற்றும் ஆவண நடைமுறைகள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படுவதை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும் எனக் கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொடர்ச்சியான கண்காணிப்பு இல்லாமை குறித்தும் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும், துறைமுக நகரம் போன்ற முக்கியமான திட்டத்தில் தனியான சட்டப் பணிப்பாளர் பதவி இல்லாதமை உள்ளிட்ட நிர்வாகக் குறைபாடுகள் தொடர்பிலும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான குறைபாடுகள், முறையான முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளின் வேகம் மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பாதிக்கக்கூடும் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.










