அரசாங்கம் முன்மொழிந்துள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு (PSTA) எதிராக கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக நீக்குமாறும், புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை (PSTA) மீளப்பெறுமாறும் கோரிக்கை விடுத்தனர்.
1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க தற்காலிக ஏற்பாடுகளின் கீழான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி, அதற்குப் பதிலாக புதிய சட்டமொன்றைக் கொண்டுவரும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை, நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஒக்டோபர் 6ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இந்தப் புதிய சட்டமூலம், பயங்கரவாதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பான புதிய சட்டக் கட்டமைப்பை அறிமுகப்படுத்துகிறது. பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் நபர்களை அடையாளம் காணுதல், கைது செய்தல், தடுப்புக்காவலில் வைத்தல், விசாரணை நடத்துதல், வழக்குத் தொடருதல் மற்றும் தண்டனை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் இடம்பெறக்கூடிய பயங்கரவாதச் செயல்களில் இருந்து நாட்டின் தேசியப் பாதுகாப்பையும் பொதுமக்களையும் பாதுகாப்பது, அத்துடன் வெளிநாடுகளில் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தயாரிப்பதற்காக இலங்கைப் பிரதேசம் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பது ஆகியவையும் இந்தச் சட்டமூலத்தின் நோக்கங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.










