தெதுரு ஓயா பள்ளத்தாக்கின் வலது கரைப் பகுதியில், காட்டு யானைகள் அதிகளவில் நடமாடும் இடத்தில் அமைந்துள்ள தனியார் காணியொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, சட்டவிரோத துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் விலங்குகளைப் பிடிப்பதற்கான பொறிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிராந்திய அலுவலகத்திற்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், குறித்த சோதனை நேற்று செவ்வாய்க்கிழமை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் வடமேல் மாகாண வனஜீவராசிகள் பிராந்திய அலுவலக அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, ஒரு துப்பாக்கி, எஸ்.ஜி. ரகத் துப்பாக்கி ரவைகள், நான்கு அழுத்தத் துப்பாக்கிகள், மூன்று ‘ஹக்கா பட்டாஸ்’ எனப்படும் வெடிபொருள் பொறிகள், விலங்குகளைப் பிடிப்பதற்கான கண்ணி மற்றும் அவற்றுடன் தொடர்புடைய பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின்போது மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றுமொரு சந்தேகநபர் அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றுள்ளார். தப்பிச் சென்ற சந்தேகநபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.











