நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் கட்டாயப் பொருள் தரநிலைகளை மீறிய குற்றச்சாட்டில், ஆடம்பரப் பொருட்கள் விற்பனை நிலையம் மற்றும் வீட்டு உபகரண விற்பனை நிலையம் ஆகியவற்றுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், 2026 செப்டெம்பர் 24ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசாரணை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், இலங்கையில் தயாரிக்கப்பட்ட 1.2 லீற்றர் கொள்ளளவு கொண்ட மீள்பாவனைக்குரிய பிளாஸ்டிக் குடிநீர்ப் போத்தல்கள், கட்டாயமான SLS 1616 தரச்சான்று குறியீடு இன்றி தலா 295 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.
தரச்சான்று இல்லாத போத்தல்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்திய குற்றச்சாட்டில் விற்பனையாளருக்கு எதிராகவும், உரிய தரநிலைகளை மீறி அவற்றை உற்பத்தி செய்து விநியோகித்த குற்றச்சாட்டில் உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டது.
மேலும், தரச்சான்று இல்லாத மின்சார நீட்டிப்பு வடங்களையும் விற்பனைக்கு வைத்திருந்தமை மற்றும் 2026 ஜூன் 10ஆம் திகதியிடப்பட்ட 2492/29ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட விதிமுறைகளுக்கு அமைவாகப் பிளாஸ்டிக் அல்லது ஏனைய பொருத்தமான பைகளுக்குக் கட்டணம் அறவிடத் தவறியமை ஆகிய குற்றச்சாட்டுகளும் விற்பனையாளர் மீது சுமத்தப்பட்டன.
கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையான பிரதிவாதிகள் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்தது.
மீள்பாவனைக்குரிய குடிநீர்ப் போத்தல்கள் மற்றும் மின்சார நீட்டிப்பு வடங்கள் போன்ற அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது, அவற்றில் SLS தரச்சான்றுக் குறியீடு, மின்சாரத் தரவுகள் மற்றும் பாதுகாப்புத் தரநிலைகள் காணப்படுகின்றனவா என்பதை நுகர்வோர் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதேவேளை, சட்டத்தால் விதிக்கப்பட்டுள்ள நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளை வர்த்தகர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.










