குற்றவியல் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளைப் பயன்படுத்தி அரசியல் எதிரிகளைத் தேர்தல் போட்டியிலிருந்து நீக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் நாட்டின் சட்டத்தின் ஆட்சி தொடர்பிலும் பல்வேறு கரிசனைகளை முன்வைத்துள்ளார்.
குற்றவியல் நீதித்துறை கட்டமைப்பைப் பயன்படுத்தி அரசியல் எதிரிகளைத் தேர்தலில் போட்டியிட முடியாத நிலைக்குத் தள்ளும் அரசாங்கம், அடுத்த தேர்தலில் மக்களை நேரடியாகச் சந்திப்பதற்கான நம்பிக்கையற்ற நிலையில் இருப்பதையே வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“உங்களது அரசியல் எதிரிகளைத் தேர்தலில் எதிர்கொள்ளத் துணிச்சல் வேண்டும். யாரைத் தெரிவுசெய்வது என்பதை மக்களிடமே விட்டுவிடுங்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 149ஆவது பிரிவு தொடர்பிலும் தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் (CIABOC) பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்படும் சான்றிதழின் அடிப்படையில், சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு அமைய சந்தேகநபர் ஒருவரை விளக்கமறியலில் வைக்க நீதவானுக்கு அதிகாரம் வழங்கும் இந்தப் பிரிவு தொடர்பில் அவர் கரிசனை வெளியிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறான சான்றிதழ்களின் அடிப்படையில் ஒருவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடுவதற்கு முன்னர், அதற்கான உண்மையான காரணங்களை ஆராய நீதவான்களுக்கு போதிய அதிகாரம் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒருவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்பதைத் தீர்மானிப்பது நீதிமன்றங்களின் பொறுப்பாக இருந்தாலும், விளக்கமறியலில் வைப்பதற்கான காரணங்களைச் சவாலுக்கு உட்படுத்துவதற்கு ஒவ்வொரு பிரஜைக்கும் அர்த்தமுள்ள வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ், பதவியிலுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 இலிருந்து 65 ஆகவும் அதிகரித்த அரசாங்கத்தின் தீர்மானத்தையும் அவர் கேள்விக்குட்படுத்தியுள்ளார்.
இந்த மாற்றங்களை ஏற்கனவே பதவியில் உள்ள நீதிபதிகளுக்குப் பொருந்தும் வகையில் நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக, எதிர்காலத்தில் நியமிக்கப்படவுள்ள நீதிபதிகளுக்கு மாத்திரம் பொருந்தும் வகையில் அமுல்படுத்தியிருக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரிப்பதற்கான நீதிபதிகள் குழுக்களை நியமிக்கும் நடைமுறையிலும் அதிக வெளிப்படைத்தன்மை அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, மூத்த அரசியல்வாதிகள் தொடர்பான வழக்குகள் மற்றும் முன்மொழியப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் குழுக்களைத் தெரிவுசெய்வதற்கான அடிப்படைக் கொள்கைகளையும், தெரிவுசெய்யப்படும் நீதிபதிகள் தொடர்பான பதிவுகளையும் பகிரங்கப்படுத்த வேண்டும் என அவர் முன்மொழிந்துள்ளார்.
இலங்கையின் அரசியல் வரலாற்றைச் சுட்டிக்காட்டிய தயாசிறி ஜயசேகர, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசாங்கம் 1980ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை உரிமைகளைப் பறித்ததையும், இதனால் 1982ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிட முடியாமல் போனதையும் நினைவுபடுத்தியுள்ளார்.
அதேபோன்ற தவறுகள் மீண்டும் இடம்பெறக்கூடாது என எச்சரித்த அவர்,
“அரசியல் எதிரி ஒருவரைத் தேர்தல் போட்டியிலிருந்து நீக்குவதற்காக நீங்கள் குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்தினால், ஜே.ஆர். சிறிமாவோவுக்கு செய்ததையே அந்த அரசியல் எதிரிக்கும் செய்கிறீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், சிறிமாவோ பண்டாரநாயக்க 1994ஆம் ஆண்டு மீண்டும் பிரதமராகப் பதவியேற்றதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“இறுதியில் சிறிமாவோவே வெற்றிச் சிரிப்பைச் சிரித்தார்” என்றும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல் நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், அரசாங்க ஆதரவாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் சாதாரண பொதுமக்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டப் பாதுகாப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.










