அரச துறை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மூன்றாம் கட்ட சம்பள அதிகரிப்பு 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் இன்று சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்றபோது உரையாற்றிய பிரதமர், அரசாங்கத்தின் அடிப்படைச் சம்பள அதிகரிப்புத் திட்டத்தின் முதல் இரண்டு கட்டங்கள் 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், தற்போது நிலவும் சம்பளம் மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஆணைக்குழு, 2027ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். குறித்த அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய சம்பளம் மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளைக் களைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் பல முக்கிய விடயங்களையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் இணையவழி முறைமையின் ஊடாகப் பரவலாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் பயனாளிகளின் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டில் 1,664 ஆகக் காணப்பட்ட நிலையில், 2026ஆம் ஆண்டில் 27,948 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜனாதிபதி நிதியத்தின் நிதி வலிமை 150 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் 100 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதித் திட்டமும் விரிவுபடுத்தப்பட்ட நன்மைகள் மற்றும் மருத்துவக் காப்புறுதி வசதிகளுடன் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அறிவித்தார்.
மேலும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு இதுவரை சுமார் 2,000 மூக்குக் கண்ணாடிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாடாளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தனிநபர்கள் தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்புவதாகவும் பிரதமர் விமர்சித்தார்.
ஆக்கபூர்வமானதும் மரியாதைக்குரியதுமான விமர்சனங்களை அரசாங்கம் வரவேற்பதாகத் தெரிவித்த அவர், எதிர்க்கட்சியினர் பொறுப்புடனும் கண்ணியத்துடனும் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.










