மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் பொலிஸ் பிரிலுள்ள வந்தாறுமூலை மாவடிவேம்பு பகுதியில், 2015-ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்தின் போது, விபத்துக்குள்ளான வாகனத்தை தீ வைத்து எரித்த 4 பேருக்கு, 3 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமாக செலுத்துமாறும், மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் நேற்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் திகதி குருநாகலில் இருந்து அக்கரைப்பற்றுக்கு பயணித்த, 66 இலட்சம் ரூபா பெறுமதியான வாகனம் ஒன்று, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை மாவடிவேம்பு பகுதியில் நபர் ஒருவரை மோதி விபத்தை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தில் விபத்துக்குள்ளான வாகனத்தை தீயிட்டு எரித்த சித்தாண்டி மற்றும் வந்தாறுமூலை பிரதேசங்களைச் சேர்ந்த 4 பேரை, கைது செய்து அவர்களுக்கு எதிராக பொலிசார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று, பின்னர் 2016ஆம் ஆண்டு வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில், குறித்த நான்கு பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றில் கடந்த அக்டோபர் 30 ஆம் திகதி இனங்காணப்பட்டு தண்டனைக்கான தீர்ப்பு திகதி அறிவிக்கப்பட்டது.
இதற்கமைய, வழக்கு தொடுநர் சார்பில் அரச சட்டவாதிகளான தர்சிகா திருக்குமரநாதன்இ சதீஸ்காந் மோகன் ஆகியோர் தீர்ப்பு வழங்கும் போது ஆஜராகியிருந்தனர்.
தண்டணைச் சட்டக்கோவை 32ம் பிரிவில் 418 பிரிவில் குற்றமான, 66 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்தான வேனை தீ வைத்து எரித்த குற்றத்திற்கு, 4 பேருக்கும் 3 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒருவர் 25 ஆயிரம் ரூபா வீதம் ஒரு இலட்சம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் தீர்ப்பளித்தார்.










