நாட்டின் 13 மாவட்டங்களில் இன்று சனிக்கிழமை மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் நிற மின்னல் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று நண்பகல் 12.03 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.00 மணி வரை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, நுவரெலியா, புத்தளம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், காலி, கண்டி, குருநாகல், பதுளை, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கங்களினால் திறந்தவெளிகளில் இருப்பவர்களுக்கு கடுமையான காயங்கள் அல்லது உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
அத்துடன், வெளிப்புறச் செயற்பாடுகள், மின்சார விநியோகம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்படக்கூடும் எனவும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.











