இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று சனிக்கிழமை கிடைக்கப்பெற்ற சமீபத்திய கண்காணிப்புத் தரவுகளின் அடிப்படையில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் கண்காணிப்பு தளத்தில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, மன்னாரில் காற்றுத் தரக் குறியீடு (AQI) 153 ஆகவும், காலி கோட்டையில் 151 ஆகவும், தம்புள்ளையில் 135 ஆகவும் பதிவாகியுள்ளது.
மேலும், ஹம்பாந்தோட்டையில் 128 ஆகவும், பதுளையில் 120 ஆகவும், குருநாகலில் 115 ஆகவும், நுவரெலியாவில் 113 ஆகவும் காற்றுத் தரக் குறியீடு பதிவாகியுள்ளது.
காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ள நிலையில், சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் நீண்ட நேரம் வெளிப்புறங்களில் இருப்பதையும், கடுமையான உடற்பயிற்சி உள்ளிட்ட உடல் உழைப்பு சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.










