சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுப்பதுடன், அதன் காப்புறுதி வசதிகளையும் விரிவுபடுத்தியுள்ளதாகவும், மஹாபொல புலமைப்பரிசில் மற்றும் மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வி மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நிராகரித்த பிரதமர், மாறாக மாணவர்களுக்கான நிதி உதவிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது சபாநாயகரை விளித்துப் பேசிய பிரதமர், நாடாளுமன்ற சிறப்புரிமைகளைத் தவறாகப் பயன்படுத்தி பொய்யான தகவல்களைப் பரப்புவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை விமர்சித்தார்.
“சபாநாயகரே, இது நியாயமற்றது என்பது மட்டுமன்றி, இந்தச் சபையின் சிறப்புரிமைகளைத் தவறாகப் பயன்படுத்தி பொய்யான கருத்துகளைப் பிரபலப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது மிகவும் வருந்தத்தக்கதாகும்.
விமர்சனங்கள் இருக்க வேண்டும். ஆனால், பொய்கள் இருக்கக்கூடாது. இவை பொதுநலன் கருதி முன்வைக்கப்படும் கருத்துகள் அல்ல. மாறாக, நாகரிகமற்ற நடத்தையின் வெளிப்பாடுகளாகும்” என பிரதமர் தெரிவித்தார்.










