அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, வறுமை மற்றும் வேலையின்மை உள்ளிட்ட நாட்டின் முக்கிய பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை முன்வைக்கத் தவறியுள்ளதுடன், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கு எவ்வித நிவாரணத்தையும் வழங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்திய பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த சஜித் பிரேமதாச, 22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கை எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினையான அன்றாட வாழ்க்கையை முன்னெடுப்பதற்கான போராட்டத்திற்குத் தீர்வுகாண அரசாங்கம் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை எனத் தெரிவித்த அவர், பொருட்களின் விலையேற்றம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பணவீக்கம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தெளிவான தீர்வுகள் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கல்வித் தகைமை பெற்ற இளைஞர்களிடையே அதிகரித்து வரும் வேலையின்மை குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தரவுகளின்படி இளைஞர் வேலையின்மை விகிதம் 43 சதவீதமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, உலக வங்கியின் தரவுகளின்படி வறுமை நிலை 60 சதவீதத்தையும் கடந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகத்தினர் அந்த நிலையிலிருந்து மீள்வதற்கான பயனுள்ள நடவடிக்கைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52 சதவீதப் பங்களிப்பை வழங்குவதுடன், சுமார் 40 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கு (MSMEs) போதிய ஆதரவு வழங்கப்படாமை குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கம் முன்மொழிந்துள்ள வட்டியில்லாக் கடன் திட்டங்கள் தொடர்பிலும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். தற்போதைய வங்கிக் கட்டமைப்பின் ஊடாக நிதியைப் பகிர்ந்தளிப்பதன் மூலம், பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள சிறு தொழில்முனைவோருக்குப் பதிலாக ஏற்கனவே வங்கிக் கடன்களைப் பெறும் நிலையில் உள்ளவர்களே அதிக நன்மையடைவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரப் பின்னடைவுகளால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்முனைவோர், முன்மொழியப்பட்டுள்ள கடன் திட்டங்களின் கீழும் நிதியைப் பெற்றுக்கொள்வதில் தொடர்ந்தும் சிரமங்களை எதிர்கொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இளம் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்தும் கேள்வி எழுப்பிய அவர், புதிய தொழில்களை ஆரம்பிப்பதற்கும் அவற்றை விரிவுபடுத்துவதற்கும் அவசியமான ஆரம்ப மூலதனம் மற்றும் செயற்பாட்டு மூலதனத்தை வழங்குவதற்கான போதிய பொறிமுறைகள் முன்மொழியப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி முன்வைத்த பொருளாதாரத் தரவுகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்து வருவதையும் பணவீக்கம் அதிகரிப்பதையும் வெளிப்படுத்துவதாகவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார அழுத்தங்கள் அதிகரித்து, அத்தியாவசிய வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க முடியாத நிலை ஏற்படும்போது பல்வேறு நாடுகளில் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளதாகவும், இலங்கையின் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் இங்கும் அவ்வாறான சூழ்நிலை உருவாகக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஜனாதிபதி சுமார் ஐந்து மணித்தியாலங்கள் நிகழ்த்திய வரவு செலவுத் திட்ட உரையை மனிதாபிமானமற்றதும் நடைமுறைத் தீர்வுகள் அற்றதுமான ‘கிளிப்பிள்ளை ஒப்புவிப்பு’ என அவர் விமர்சித்துள்ளார்.
குடும்பங்களின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதற்கும், நெருக்கடியில் உள்ள தொழில்முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் தேவையான குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கொண்டிருக்கவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.










