அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் புரூக்ளின் பகுதியில் மூன்று மாடிக் குடியிருப்புக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட எட்டுப் பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களில் 20 வயதுகளிலும் 30 வயதுகளின் ஆரம்பத்திலும் உள்ள ஆறு வயது வந்தவர்களும், 9 வயதுடைய சிறுமி ஒருவரும், 10 வயதுடைய சிறுவன் ஒருவரும் அடங்குவதாக நியூயோர்க் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் கட்டுமானப் பணியாளர்கள் இருவரும் உள்ளடங்குவதாக நியூயோர்க் நகர மேயர் ஸொஹ்ரான் மம்தானி நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 14 பொதுமக்களும் நான்கு தீயணைப்புப் படையினரும் அடங்கலாக 18 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், நிலைமை சீராக இருப்பதாகவும், ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் மேயர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ள நியூயோர்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல், சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு மாநில அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.










