இரண்டு மோட்டார் சைக்கிள்களை விடுவிப்பதற்குத் தேவையான ஆவணங்களை வழங்குவதற்காக 30,000 ரூபாய் இலஞ்சம் கோரி பெற்ற குற்றச்சாட்டில் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 2.25 மணியளவில் சுங்கத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்குள் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரி, முறைப்பாட்டாளரின் மருமகனும் அவரது நண்பரும் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் சுங்க அனுமதியுடன் விடுவிப்பதற்கான ஆவணங்களை வழங்குவதற்காக, ஒவ்வொரு மோட்டார் சைக்கிளுக்கும் தலா 15,000 ரூபாய் வீதம் மொத்தமாக 30,000 ரூபாய் இலஞ்சம் கோரி பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.









