சமூக ஊடகங்களில், குறிப்பாக பேஸ்புக் தளத்தில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரைப் போன்ற தோற்றத்தில் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி காணொளிகள் மற்றும் விளம்பரங்கள் பரவி வருவதாக இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மத்திய வங்கி, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட காணொளிகள் மற்றும் விளம்பரங்களில் மத்திய வங்கி ஆளுநர் நிதி ஆலோசனைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளைப் பரிந்துரைப்பது போன்ற போலியான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இவ்வாறான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், அவற்றில் முன்வைக்கப்படும் நிதி ஆலோசனைகள், முதலீட்டு வாய்ப்புகள் அல்லது ஏனைய கூற்றுகளின் அடிப்படையில் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டாம் எனவும் மத்திய வங்கி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலிக் காணொளிகளின் உதாரணங்களை உள்ளடக்கிய விழிப்புணர்வு அறிவிப்பொன்றையும் மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
எந்தவொரு நிதி சார்ந்த தீர்மானத்தையும் மேற்கொள்வதற்கு முன்னர், மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ தகவல் தொடர்பு வழிமுறைகள் ஊடாகத் தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இவ்வாறான தவறான தகவல்கள் மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில், போலிக் காணொளிகள் மற்றும் விளம்பரங்களை சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறும் மத்திய வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.










