நுவரெலியாவில் தங்கும் விடுதியொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த, பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்ற 27 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட தகவலின்படி, நேற்று வியாழக்கிழமை மாலை நுவரெலியா பேருந்து நிலையத்திற்கு அருகில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகஸ்தோட்டை பகுதியில் அமைந்துள்ள தங்கும் விடுதியொன்றில் கடந்த நவம்பர் 10ஆம் திகதி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், விசாரணை அதிகாரிகளால் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
திரப்பனை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த சந்தேகநபர் நவம்பர் 10ஆம் திகதி திரிப்பஹ பொலிஸ் பிரிவில் பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










