மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பல்வேறு இணையச் சேவைகளில் நேற்று வியாழக்கிழமை ஏற்பட்ட பரவலான தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, உலகின் பல பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சேவை முடக்கங்களைக் கண்காணிக்கும் Downdetector இணையத்தளம் தெரிவித்துள்ளது.
பிற்பகல் 1 மணிக்கு சற்று முன்னதாக ஆரம்பமான இந்தத் தொழில்நுட்பக் கோளாறு, Microsoft 365, Outlook மற்றும் Teams ஆகிய சேவைகளைப் பாதித்துள்ளது. இதன்போது Outlook சேவையில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து சுமார் 130,000 பயனர்கள் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில், Amazon Web Services மற்றும் Google சேவைகளைப் பயன்படுத்தும் சிலரும் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து Downdetector தளத்தில் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர்.
Microsoft 365 சேவைகளில், குறிப்பாக Exchange Online சேவையில் பயனர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும், அது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சேவைகளை விரைவாக வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், பயனர்களின் பொறுமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தொழில்நுட்பக் கோளாறு தொடர்பான அறிவிப்புகளை மைக்ரோசொப்ட் தனது Microsoft 365 Status என்ற உத்தியோகபூர்வ சமூக ஊடகக் கணக்கின் ஊடாக வெளியிட்டுள்ளது.
இதேவேளை, தமது சேவைகள் வழமைபோன்று இயங்குவதாக Amazon நிறுவனம் தெரிவித்துள்ளது. இணையத்தின் வேறு பகுதியில் ஏற்பட்டுள்ள தொடர்பற்ற இடையூறு காரணமாகத் தவறான தகவல்கள் வெளியாகி வருவதாகவும், துல்லியமான தகவல்களுக்கு தமது சேவை நிலை கண்காணிப்புப் பக்கத்தைப் பார்வையிடுமாறும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
பிற்பகல் 4 மணியளவில், பாதிக்கப்பட்ட சில சேவையகங்களை மீண்டும் இயங்கச் செய்வதற்கான மாற்று சேவை நிலை சரிபார்ப்பு முறையொன்றை உறுதிப்படுத்தியுள்ளதாக மைக்ரோசொப்ட் அறிவித்துள்ளது.
இந்த மாற்றத்தை மேலும் பல சேவையகங்களுக்குப் பயன்படுத்தி வருவதாகவும், பதிலளிக்காத சேவையகங்களைத் தானாகக் கண்டறிந்து மீள ஆரம்பிக்கும் தானியங்கி மீட்பு முறைமைகளையும் தயாரித்து வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆரம்பத்தில், பல பிராந்தியங்களில் உள்ள உட்கட்டமைப்புகளில் ஏற்பட்ட அதிகப்படியான சுமையே இந்தத் தொடர்பாடல் பாதிப்புக்குக் காரணம் என மைக்ரோசொப்ட் குறிப்பிட்டிருந்தது.
எனினும், பல சேவையகங்கள் எதிர்பாராத விதமாகச் செயலிழந்ததால், எஞ்சிய சேவையகங்கள் மீது அதிக சுமை ஏற்பட்டுள்ளதாகப் பின்னர் மேற்கொண்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், சில சேவையகங்கள் தானியங்கி செயல்நிலைப் பரிசோதனைகளில் தோல்வியடைந்துள்ளதாகவும், பாதிப்பு மேலும் பரவுவதைத் தடுப்பதற்கும் செயலிழந்த சேவையகங்களை மீண்டும் இயங்கச் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளது.










