அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், நாட்டின் அவசர பொருளாதார சவால்களுக்குத் தீர்வுகளை முன்வைக்கவில்லை என்றும், மக்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணங்களை வழங்கத் தவறியுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவர், முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன விமர்சித்துள்ளார்.
கொழும்பு ப்ளவர் வீதியிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், குறிப்பாக மில்லேனியல் தலைமுறையினர் மற்றும் தலைமுறை Z இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்கான உரிய முன்மொழிவுகள் வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெறவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் தொழில்நுட்பத் துறையில் வேகமாக முன்னேறி வரும் நிலையில், இலங்கை தொடர்ந்து பின்தங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இளைய தலைமுறையினருக்குத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான போதிய திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
2028ஆம் ஆண்டளவில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பை 13 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, 2028ஆம் ஆண்டளவில் சர்வதேச நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய கடன் தவணைகள் 3.5 பில்லியன் முதல் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், இந்தக் கடப்பாடுகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது குறித்து வரவு செலவுத் திட்டத்தில் தெளிவுபடுத்தப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வேலைத்திட்டம் தொடர்பான அரசாங்கத்தின் அணுகுமுறை குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த வேலைத்திட்டத்தை மேற்பார்வையிடுவதற்காகப் புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை, அரசாங்கத்திற்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பதற்கான அறிகுறியாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், அரச ஊழியர்கள் பலர் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும், அவர்களில் சிலர் தமது சம்பளத்தில் சுமார் 60 சதவீதத்தை கடன் தவணைகளைச் செலுத்துவதற்காகச் செலவிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அன்றாடச் செலவுகளைச் சமாளிப்பதற்காகப் பொதுமக்கள் தங்க நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை அடகு வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், சிலரால் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தினால் அடகு வைத்த பொருட்களை இழக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பொருளாதார நெருக்கடிகளிலிருந்து குடும்பங்கள் மீண்டெழுவதற்கு உதவும் வகையில் வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்றும் வஜிர அபேவர்தன விமர்சித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதாரக் கொள்கைகள், பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு உதவியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அந்தப் பொருளாதார மீட்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான தெளிவான பொருளாதாரத் தொலைநோக்கோ அல்லது மூலோபாயமோ தற்போதைய அரசாங்கத்திடம் இல்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன குற்றஞ்சாட்டியுள்ளார்.










