அநுராதபுரம் புனித நகரில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஏழு பேரையும் எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புனிதப் பகுதியில் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்ததன் மூலம் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாக சந்தேகநபர்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏழு பேரையும் மனநல மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தவும், அவர்கள் போதைப்பொருள் பாவித்துள்ளனரா என்பதைக் கண்டறிய மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அநுராதபுரம் ருவன்வெலிசாயவுக்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட இந்த உண்ணாவிரதப் போராட்டம், முன்மொழியப்பட்டுள்ள அநுராதபுரம் புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரியும் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை ராஜாங்கனே சத்தாரதன தேரர் தலைமையிலான குழுவினர், போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்ததைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
இதன்போது ஏற்பட்ட மோதலில் சத்தாரதன தேரரின் தலையில் காயம் ஏற்பட்டதையடுத்து, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பலரை கைது செய்து பொலிஸ் காவலில் எடுத்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை விளக்கமறியலில் வைக்கவும் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.









