ஸ்பெயினின் இரண்டாம் பிரிவு கால்பந்துக் கழகமான CD Tenerife அணியின் முன்கள வீரர் ஜெசுஸ் டி மிகுவேல் (வயது 30), போட்டியின்போது ஏற்பட்ட கடுமையான மோதலைத் தொடர்ந்து உயிரிழந்துள்ளார்.
FC Andorra அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின்போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தபோது, போட்டியின் இறுதிக் கட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
Andorra அணியின் கோல் காப்பாளர் ஜெசுஸ் ஓவோனோ (Jesús Owono), தனது கோல் எல்லையிலிருந்து வெளியேறி மைதானத்தின் மத்திய பகுதியில் இருந்த டி மிகுவேலுடன் மோதியுள்ளார். இதனையடுத்து கோல் காப்பாளர் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டதுடன், போட்டியும் இடைநிறுத்தப்பட்டது.
ஸ்பெயின் ஊடகங்களின் தகவலின்படி, மைதானத்தில் இருந்தபோதே டி மிகுவேலுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு உடனடியாக உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிப்பதற்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
எனினும், அவரது நரம்பியல் நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து அவர் உயிரிழந்துள்ளதாக Tenerife கழகம் பின்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து துக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த Copa del Rey மற்றும் Copa de la Reina போட்டிகளை ஸ்பெயின் ரோயல் கால்பந்துச் சம்மேளனம் (RFEF) ஒத்திவைத்துள்ளது.
2025ஆம் ஆண்டு முதல் Tenerife அணிக்காக விளையாடி வந்த ஜெசுஸ் டி மிகுவேல், இதற்கு முன்னர் Castellón, Unionistas de Salamanca மற்றும் Leganés ஆகிய கழகங்களுக்காகவும் விளையாடியுள்ளார்.










