மஹியங்கனை பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் தோல்கள் மற்றும் உடற்பாகங்கள் பெருமளவில் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிராந்துருகோட்டே வன யானைகள் முகாமைத்துவப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
மஹியங்கனை – பதியத்தலாவ வீதியின் வெவத்த, அம்பலவத்த பகுதியில் வசிக்கும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சுற்றிவளைப்பின்போது நான்கு யானைத் தந்தப் பற்கள், யானையின் முதுகெலும்புத் துண்டுகள் பல, பெருமளவிலான முள்ளம்பன்றி முட்கள், நூற்றுக்கணக்கான யானை வால் முடிகள், சிறுத்தையின் தோல் துண்டுகள், முதலைத் தோல், இரண்டு மரநாய் தோல்கள், மரநாயின் தலை மற்றும் இறைச்சி, இரண்டு மான் தோல்கள் ஆகியன வனவிலங்கு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், 1,000க்கும் அதிகமான மயில் இறகுகள், சிறுத்தையின் மண்டையோடு மற்றும் கரடி எண்ணெய், பன்றிக் கொழுப்பு ஆகியவற்றைக் கொண்ட பல போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட வனவிலங்குகளின் உடற்பாகங்களும் அன்றைய தினமே மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, சந்தேகநபரை எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.










