முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 6ஆவது லீக் ஆட்டத்தில், இங்கிலாந்து அணிக்கு எதிராக 387 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.
லாகூரில் நடைபெறும் இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 386 ஓட்டங்களைப் பெற்றது.
இங்கிலாந்து அணியின் சார்பில் பென் டக்கெட் 132 பந்துகளில் 167 ஓட்டங்களைப் பெற்று அபாரமாக விளையாடினார். டாம் பேன்டன் 74 ஓட்டங்களையும், ஹாரி புரூக் 44 ஓட்டங்களையும், வில் ஜாக்ஸ் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 55 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தசுன் ஷானக மற்றும் இஷான் மலிங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இந்நிலையில், 387 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி, 17 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இப்போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் குஷல் மெண்டிஸ் முதலில் பந்துவீசத் தீர்மானித்தார்.
பாகிஸ்தான், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த 18ஆம் திகதி பாகிஸ்தானில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.










