இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL), 2026ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டுக்கான உத்தேச மின்சாரக் கட்டண அதிகரிப்பை 2.88 வீதத்திலிருந்து 1.46 வீதமாகக் குறைத்துள்ளது.
மின்சாரத் துறையுடன் தொடர்புடைய நிறுவனங்கள் சமர்ப்பித்த செலவு அறிக்கைகளை ஆரம்பகட்டமாக மீளாய்வு செய்ததன் பின்னர் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நவம்பர் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்ட ஆலோசனை ஆவணத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் மின்சாரத் துறைக்கு 4.4 பில்லியன் ரூபாய் வருமானப் பற்றாக்குறை ஏற்படும் என்ற கணிப்பின் அடிப்படையில் ஆரம்பத்தில் 2.88 வீத மின்சாரக் கட்டண அதிகரிப்பு முன்மொழியப்பட்டிருந்தது.
குறித்த காலாண்டில் மின்சார விநியோகத்திற்கான மொத்தச் செலவு 157.3 பில்லியன் ரூபாயாகவும், எதிர்பார்க்கப்படும் வருமானம் 154 பில்லியன் ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், மின் உற்பத்தித் திறன் தொடர்பான செலவுகள் அதிகரித்தமை மற்றும் தரமற்ற நிலக்கரியைப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட செலவுகள் உள்ளிட்ட சில செலவினங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தனது ஆரம்பகட்ட மதிப்பீட்டில் சுட்டிக்காட்டியுள்ளது.
மின்சார விநியோகத்தை மேம்படுத்தும் திட்டத்திற்கான கடன் மீள்செலுத்துகை தொடர்பான 1.1 பில்லியன் ரூபாய் செலவு உள்ளிட்ட Electricity Distribution Lanka (Pvt) Ltd. நிறுவனம் சமர்ப்பித்த சில மேலதிக செலவுகளை ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளவில்லை.
அத்துடன், மின் உற்பத்தித் திறன் செலவுகளில் முன்மொழியப்பட்ட அதிகரிப்பும் நீக்கப்பட்டுள்ளதுடன், 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பயன்படுத்தப்பட்ட தரமற்ற நிலக்கரி தொடர்பான மேலதிக செலவினங்களும் மீளாய்வு செய்யப்பட்டுள்ளன.
இந்தத் திருத்தங்களின் அடிப்படையில், உத்தேச மின்சாரக் கட்டண அதிகரிப்பு 1.46 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் நிலக்கரியின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நீர்மின் உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி குறைவடைந்துள்ளதால், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுடன் ஒப்பிடுகையில் டிசம்பர் மாதத்திற்கான மின்சார உற்பத்திச் செலவு சுமார் 34 வீதத்தால் அதிகரிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கருத்துக் கேட்பு மற்றும் தொடர்புடைய தரப்பினரின் கருத்துகளைப் பெற்ற பின்னரே மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி முடிவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிக்கவுள்ளது.










