உலகின் மிகப்பெரிய கிரிப்டோ நாணயப் பரிவர்த்தனை நிறுவனமான Binance நிறுவனத்திடமிருந்து 6.3 பில்லியன் டொலர் பெறுமதியான கிரிப்டோ நாணயங்களை ஹேக்கர்கள் திருடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி வேலைவாய்ப்பு நேர்காணல்கள் மற்றும் ஊடுருவப்பட்ட செயற்கை நுண்ணறிவுக் (AI) கருவி ஒன்றைப் பயன்படுத்தி இந்த சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக Binance நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, முறையான வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு தளம் ஒன்றின் ஊடாக Binance நிறுவனத்தின் பொறியியலாளர் ஒருவரை அணுகிய ஹேக்கர்கள், நிறுவனத்தின் பிரதிநிதிகள் போன்று நடித்து அவருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது நேர்காணலின்போது, வேலைவாய்ப்புக்கான மதிப்பீட்டுப் பணியாகக் கூறி ஒரு கோப்பைப் பதிவிறக்கம் செய்யுமாறு குறித்த பொறியியலாளரிடம் கோரப்பட்டுள்ளது. எனினும், அந்தக் கோப்பில் தீங்கிழைக்கும் மென்பொருள் மறைக்கப்பட்டிருந்ததுடன், அதன் மூலம் அவரது கணினி இரகசியமாக ஊடுருவப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஊடுருவப்பட்ட கணினியையும் நிறுவனத்தின் உள்விவகாரச் செயற்கை நுண்ணறிவுக் கருவியையும் பயன்படுத்திய ஹேக்கர்கள், மேலும் இரண்டு பொறியியலாளர்களின் மடிக்கணினிகளையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதன் மூலம் பில்லியன் கணக்கான டொலர் பெறுமதியான கிரிப்டோ நாணயங்களைப் பரிமாற்றம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் கணினி அமைப்புகளுக்குள் அவர்கள் அணுகலைப் பெற்றுள்ளனர்.
இந்த சைபர் தாக்குதலைத் தொடர்ந்து, உலகளாவிய ரீதியில் வாடிக்கையாளர்களின் பண மீளப்பெறுதலை Binance நிறுவனம் தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தத் தாக்குதலுடன் வடகொரிய ஹேக்கர்களுக்குத் தொடர்பு இருப்பதாக அமெரிக்க விசாரணையாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ள போதிலும், இதில் தமக்குத் தொடர்பில்லை என வடகொரியா மறுத்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மன்னிப்புக் கோரியுள்ள Binance நிறுவனம், திருடப்பட்ட சொத்துக்களை மீட்டெடுப்பதற்கும் தனது பாதுகாப்புக் கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.










