இந்தியா, நியூசிலாந்து இடையேயான 3வது ரி20 போட்டி, நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் உள்ள மைதானத்தில் இன்று(27) நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி வெறும் 2.2 ஓவர்களில் 50 ஓட்டங்களை எட்டியது. இதன்மூலம், ரி20 சர்வதேசப் போட்டிகளில் அதிவேகமாக 50 ஓட்டங்களை எட்டிய அணிகள் பட்டியலில் ஏற்கெனவே இருந்த உலக சாதனையை இந்தியா சமன் செய்தது.
தொடர்ந்து 5 ஓவர்களில் 100 ஓட்டங்களை எட்டியது. இதற்கு முன்பு ருமேனியா அணி 5.2 ஓவர்களில் 100 ஓட்டங்களை எட்டியதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது இந்தியா முறியடித்துள்ளது.
இதேவேளை,முதல் 6 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 118 ஓட்டங்களை குவித்தது. இதன் மூலம் ஆண்கள் ரி20 சர்வதேசப் போட்டிகளில் பவர்பிளேயில் அதிக ஓட்டங்கள் எடுத்த அணி என்ற புதிய சாதனையை இந்தியா படைத்தது.
இப்போட்டியில் அபிஷேக் சர்மா வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர், 35 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இறுதியில் 38 பந்துகளில் 113 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மறுபுறம், வைபவ் சூர்யவன்ஷி 19 பந்துகளில் 45 ஓட்டங்கள் விளாசினார். இருவரும் இணைந்து இந்திய அணிக்கு அதிரடியான தொடக்கத்தை அளித்தனர்.
அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 13.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
மேலும், இந்த போட்டியில் இந்திய அணி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளமை இரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.










