வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான முன்னெடுப்பு (BIMSTEC) கடல்சார் பாதுகாப்புப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்தியா சென்றிருந்த இலங்கை கடற்படை அதிகாரி ஒருவர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இலங்கை கடற்படையின் SLNS கஜபாகு கப்பலின் குழு உறுப்பினரான கமாண்டர் எஸ்.ஏ.எஸ்.எம். சமரகோன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த நவம்பர் 2ஆம் திகதி இந்தியாவின் ஸ்ரீ விஜயபுரத்தில் அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவுக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நடைபெற்ற BIMSTEC கடல்சார் பாதுகாப்புப் பயிற்சியில் பங்கேற்ற இலங்கை கடற்படைக் குழுவில் கமாண்டர் சமரகோனும் இடம்பெற்றிருந்ததாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த கடற்படை அதிகாரியின் பூதவுடல் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான C-130 ரக விமானம் மூலம் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
பூதவுடல் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், அவரது மறைவுக்கு மீண்டும் இரங்கலைத் தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான முன்னெடுப்பு (BIMSTEC) என்பது இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட ஏழு உறுப்பு நாடுகளுக்கு இடையில் பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் பிராந்திய அமைப்பாகும்.










