நாட்டின் 74 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கிய வகையில், எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி முதல் நவம்பர் 14ஆம் திகதி வரை விசேட தேசிய டெங்கு தடுப்பு வாரத்தை முன்னெடுக்க சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தீர்மானித்துள்ளது.
அண்மைக்கால டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை, நுளம்புகள் தொடர்பான ஆய்வுக் குறியீடுகள் மற்றும் மாறிவரும் காலநிலை நிலைமைகள் ஆகியவற்றின் அடிப்படையில், டெங்கு நோய்ப் பரவல் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் சார்பில் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (செய்தி மற்றும் விளம்பரம்) லக்ஷ்மேந்திர தமயந்தகுமார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் நவம்பர் 2ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், சீரற்ற காலநிலை காரணமாக அது பிற்போடப்பட்டுள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, ‘Clean Sri Lanka’ செயலகம், இலங்கை பொலிஸார், முப்படையினர் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து இந்த நாடளாவிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.
இதன்போது, சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், கூட்டு பரிசோதனைக் குழுக்களை ஈடுபடுத்துதல், கைவிடப்பட்ட கட்டடங்கள் மற்றும் வளாகங்களில் காணப்படும் நுளம்புப் பெருக்கம் ஏற்படும் இடங்களை அழித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும், பாடசாலைகள், பிரிவேனாக்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் விசேட சுத்திகரிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், நாளாந்த நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக விசேட செயற்பாட்டு அறையொன்றும் அமைக்கப்படவுள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர கருத்துத் தெரிவிக்கையில், நுளம்புகள் தொடர்பான ஆய்வுக் குறியீடுகள் மற்றும் டெங்கு நோயாளர்கள் தொடர்பான தகவல்கள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வேலைத்திட்டம் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அதற்கு பரந்த ஊடகப் பிரசாரத்தை வழங்குமாறும் ஊடக நிறுவனங்களிடம் சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.










