பிரித்தானிய நகைச்சுவை நடிகரும் திரைப்பட நடிகருமான ரஸ்ஸல் பிராண்ட், பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு மற்றும் மூன்று பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.
லண்டனிலுள்ள சவுத்வார்க் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
51 வயதான ரஸ்ஸல் பிராண்ட், தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்திருந்த நிலையில், 1999 முதல் 2009 வரையான காலப்பகுதியில் பெண்கள் தொடர்பான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் மீது சுமத்தப்பட்ட ஏழு குற்றச்சாட்டுகளில் நான்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஏனைய இரண்டு பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுகள் மற்றும் ஒரு பாலியல் துஷ்பிரயோக முயற்சிக் குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தீர்ப்பு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதி பென்னத்தன், ரஸ்ஸல் பிராண்டுக்கு கணிசமான கால சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என எச்சரித்துள்ளார்.
குறிப்பாக, ஆறாவது குற்றச்சாட்டில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், குறிப்பிடத்தக்க காலத்திற்கான சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது தெளிவாகத் தெரிவதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, ரஸ்ஸல் பிராண்ட் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கான தண்டனை எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.
ஒக்டோபர் 12ஆம் திகதி ஆரம்பமான இந்த வழக்கு விசாரணையில், ஆறு பெண்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்றன. பிரித்தானிய சட்டத்தின் கீழ், குறித்த பெண்களின் அடையாளங்களை வாழ்நாள் முழுவதும் இரகசியமாகப் பேணுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின்போது, ரஸ்ஸல் பிராண்டை பாலியல் வேட்டையாடுபவர் என அரச தரப்பு வழக்கறிஞர்கள் வர்ணித்திருந்த நிலையில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளைப் பாதுகாப்புத் தரப்பு நிராகரித்திருந்தது.
விசாரணையின்போது சாட்சியமளித்த ரஸ்ஸல் பிராண்ட், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும், தனது வாழ்க்கையில் பேரழிவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும், மற்றொரு தரப்பினரின் சம்மதமின்றி எந்தவொரு பாலியல் செயற்பாட்டிலும் தான் ஈடுபட்டதில்லை எனக் குறிப்பிட்ட அவர், பாலியல் உறவில் இரு தரப்பினரின் சம்மதம் மிகவும் முக்கியமானது என்றும் வலியுறுத்தியிருந்தார்.
நகைச்சுவை நடிகர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் மற்றும் ஹொலிவூட் திரைப்பட நடிகர் எனப் பிரபலமடைந்த ரஸ்ஸல் பிராண்ட், பின்னர் இணையவழியில் அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் தொடர்பான தனது கருத்துக்களை வெளியிடுவதன் மூலமும் கவனம் பெற்றிருந்தார்.










