பிரான்ஸில் உள்ள பல்பொருள் அங்காடிகளின் குளிரூட்டல் கட்டமைப்புகளை இலக்கு வைத்து அண்மையில் முன்னெடுக்கப்பட்ட சைபர் தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள பிரான்ஸ், இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்தத் தாக்குதல்கள் காரணமாக பல்பொருள் அங்காடிகளில் தீ விபத்துகள் ஏற்பட்டதுடன், பெருமளவிலான உணவுப் பொருட்களும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் (IRGC) தொடர்புடைய சைபர் பிரிவு ஒன்றுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பிரான்ஸுக்கான ஈரான் தூதுவர் அழைக்கப்பட்டுள்ளதாகவும், ஐரோப்பிய மட்டத்தில் ஈரானுக்கு எதிராகத் தடைகள் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜீன்-நோயல் பாரோ தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் பிரான்ஸ் பல்பொருள் அங்காடிகள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்களை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையே முன்னெடுத்ததாகத் தன்னால் உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் தொடர்புடைய ‘ஷாஹித் காவே’ (Shahid Kaveh) என்ற தாக்குதல் நோக்கிலான சைபர் பிரிவின் தலைவர் மற்றும் அவரது இரு உதவியாளர்களுக்கு எதிராக சர்வதேச கைது உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு பாரிஸ் அரச சட்டத்தரணிகள் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தச் சைபர் தாக்குதல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தீவிரமானது என வெளிவிவகார அமைச்சர் பாரோ தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் மண்ணில் நாசவேலை நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட முதலாவது பாரிய அளவிலான சைபர் தாக்குதல் இதுவெனக் குறிப்பிட்ட அவர், இது நாட்டின் நலன்களுக்கும் பிரான்ஸ் மக்களின் பாதுகாப்புக்கும் எதிரான பாரிய அச்சுறுத்தல் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலுக்குப் பதிலளிக்காமல் பிரான்ஸ் இருக்காது என்றும், இதுபோன்ற தாக்குதல்களை மீண்டும் முன்னெடுக்க முயற்சிப்பவர்களைத் தடுக்கும் வகையில் தேவையான மற்றும் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின்படி, தாக்குதலாளர்கள் பாரசீக மொழியைப் பயன்படுத்தியதுடன், ஈரானில் அமைந்துள்ள சாதனங்களுடன் தொடர்புடைய இணைய நெறிமுறை முகவரிகளையும் (IP Addresses) பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பல்பொருள் அங்காடிகளின் குளிரூட்டல் கட்டமைப்புகளுக்குள் இணையம் ஊடாக ஊடுருவிய தாக்குதலாளர்கள், அவற்றின் வெப்பநிலையைத் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தி, இரவு நேரங்களில் 50 பாகை செல்சியஸ் வரை அதிகரித்துள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பல மில்லியன் யூரோக்கள் பெறுமதியான உணவுப் பொருட்கள் பழுதடைந்துள்ளதாக வர்த்தக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சில இடங்களில் வெப்பநிலை அதிகரித்ததன் காரணமாக தீ விபத்துகள் ஏற்பட்டதுடன், குளிரூட்டல் உபகரணங்களும் உருகிச் சேதமடைந்துள்ளன.
E-Leclerc, Intermarché, Carrefour, Monoprix மற்றும் Cooperative U ஆகிய பிரான்ஸின் முக்கிய பல்பொருள் அங்காடி நிறுவனங்கள் இந்தத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதில் Intermarché மற்றும் அதன் Netto வர்த்தகப் பெயரின் கீழ் இயங்கும் குறைந்தது 300 பல்பொருள் அங்காடிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
Cooperative U நிறுவனத்தின் 100க்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடிகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், Carrefour நிறுவனத்தின் 80 அங்காடிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சுமார் 490 கிளைகளைக் கொண்ட Monoprix நிறுவனத்தின் 5 சதவீதமான அங்காடிகளும் இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த நவம்பர் 2ஆம் திகதி ஐரோப்பாவின் மேலும் பல நாடுகளிலும் இதேபோன்ற குளிரூட்டல் கட்டமைப்புப் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
பெல்ஜியம், எஸ்தோனியா, அயர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் இரவு நேரங்களில் குளிரூட்டல் கட்டமைப்புகளின் வெப்பநிலை திடீரென அதிகரித்துள்ளது.
இதனால் பல டஜன் பல்பொருள் அங்காடிகளும் உணவுப் பொருட்கள் விநியோக மையம் ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.










