பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் பெண் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான ராபியா அஹ்சன், கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அவரது கணவர் அஹ்சன் தாஹிர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள முதற்கட்ட பொலிஸ் முறைப்பாட்டின் (FIR) பிரதியின்படி, ராபியா அஹ்சன் (வயது 41) பிற்பகல் சுமார் 3 மணியளவில் தனது படுக்கையறையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்ற வேளையில் அவருடன் வசித்து வந்த அவரது தாயும் சகோதரியும் வீட்டின் முற்றத்தில் இருந்துள்ளனர்.
பாகிஸ்தானின் Samaa ஊடக அறிக்கையின்படி, தனது மனைவியைக் கொலை செய்ததை அவரது கணவர் அஹ்சன் தாஹிர் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்ட ராபியாவின் சகோதரி அல்வினா, உடனடியாக படுக்கையறைக்கு விரைந்தபோது, ராபியா இரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்ததையும், அவரது கணவர் கைத்துப்பாக்கியுடன் நின்றிருந்ததையும் கண்டுள்ளார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட உடல் பரிசோதனையில், ராபியாவின் கழுத்துக்குக் கீழே ஒரு துப்பாக்கிச் சூட்டுக் காயமும், முதுகின் வலது பக்கத்தில் மற்றொரு காயமும் காணப்பட்டுள்ளன.
பஞ்சாப் தடயவியல் அறிவியல் அதிகார சபையினர் (PFSA), சம்பவ இடத்திலிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் .30 ரக கைத்துப்பாக்கி மற்றும் அதற்குரிய தோட்டாக்களைக் கைப்பற்றியுள்ளனர்.
இதற்கிடையில், வீட்டில் பணியாற்றிய ஆண் பணியாளர் ஒருவர் பொலிஸாரிடம் வழங்கிய தகவலின்படி, துப்பாக்கிச் சூடு தவறுதலாக இடம்பெற்றதாக அஹ்சன் தாஹிர் தெரிவித்திருந்ததாக Dawn ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், விசாரணையின்போது குறித்த கைத்துப்பாக்கியை வைத்திருப்பதற்கான செல்லுபடியாகும் உரிமம் அல்லது அனுமதிப்பத்திரத்தை அஹ்சன் தாஹிர் சமர்ப்பிக்கத் தவறியுள்ளார்.
சம்பவம் தொடர்பான தகவல்கள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில், பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் கொலைக் குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, பெண் ஊடகவியலாளர் ராபியா அஹ்சனின் படுகொலைக்கு பாகிஸ்தான் ஜனாதிபதியின் மனைவி ஆசீபா பூட்டோ சர்தாரி ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளதுடன், இந்த வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் உண்மைகளைக் கண்டறிவதற்கும், குற்றவாளிகள் பொறுப்புக்கூறப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும் பக்கச்சார்பற்ற, வெளிப்படையான மற்றும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பெண்கள் தமது உயிருக்கு அச்சுறுத்தல் இன்றி வாழவும் பணியாற்றவும் கூடிய சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு பெண் குழந்தைகளின் தாயான ராபியா அஹ்சன், 92 News தொலைக்காட்சியில் பணியாற்றி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரது கணவர் அஹ்சன் தாஹிர், வெளிநாடுவாழ் பாகிஸ்தானியர் அறக்கட்டளையில் (OPF) பிரதி பணிப்பாளராகப் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.










