இத்தாலியில் 300க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று புதன்கிழமை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் பொது உட்கட்டமைப்புகள் மற்றும் நிறுவனங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் இணையத் தாக்குதல்களின் தொடர்ச்சியாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஸ்கொட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் அயர்லாந்து குடியரசிலுள்ள பாடசாலைகளுக்கும் வெளிநாடுகளிலிருந்து இதேபோன்ற மின்னஞ்சல் மிரட்டல்கள் கிடைத்துள்ளன. எனினும், அந்நாட்டு அதிகாரிகள் அவற்றை விரைவில் போலியான அச்சுறுத்தல்கள் என உறுதிப்படுத்தியதால், பாடசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்படவில்லை.
ஆனால் இத்தாலியில் இந்த மிரட்டல்கள் காரணமாக பாரிய குழப்பம் ஏற்பட்டதுடன், பெற்றோர் அவசரமாக பாடசாலைகளுக்குச் சென்று தமது பிள்ளைகளை அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த மிரட்டல்களால் எந்தவித ஆபத்தும் இல்லை என இத்தாலிய பிரதமர் ஜோர்ஜியா மெலோனி பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார். மாணவர்கள் பாடசாலை ஊழியர்களின் கண்காணிப்பின் கீழ் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் பாடசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தாலியில் கிடைத்த மின்னஞ்சல்கள் “மிகைல் அன்ட்ரோபோவ், விலாயத் ஒப் மிசோஜினிஸ்தானின் தலைவர்” என்ற பெயரில் கையொப்பமிடப்பட்டிருந்தன. அயர்லாந்து மற்றும் பல்கேரியாவில் செய்தி நிறுவனங்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்களுக்கும் இதே அமைப்பு பொறுப்பேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அச்சுறுத்தல்களின் பின்னணியில் ரஷ்யா மற்றும் ஈரான் உள்ளிட்ட வெளிநாட்டு சக்திகள் இருக்கலாம் என ஐரோப்பிய அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் குய்டோ குரோசெட்டோ கருத்துத் தெரிவிக்கையில், இத்தகைய நடவடிக்கைகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் தெளிவான மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும் என குறிப்பிட்டுள்ளார். இவை பகைமை கொண்ட அரசுகள், வெளிநாட்டு அமைப்புகள் அல்லது கவனத்தை ஈர்க்க முயற்சிக்கும் தனிநபர்களால் மேற்கொள்ளப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இத்தாலிய பாடசாலை அதிபர்கள் சங்கத்தின் தலைவர் அன்டோனெல்லோ ஜியானெல்லி, போலியான வெடிகுண்டு மிரட்டல்கள்கூட குடும்பங்களுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்துவதுடன், கல்வி நடவடிக்கைகளையும் பெரிதும் பாதிக்கின்றன என சுட்டிக்காட்டியுள்ளார்.










