செனகல் கடற்பரப்பில் டக்கார் மற்றும் செயின்ட் லூயிஸ் நகரங்களுக்கு இடையில், ஸ்பெயினின் கேனரி தீவுகளை நோக்கிப் பயணித்த மரத்தினால் செய்யப்பட்ட சிறிய குடியேற்றப் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
செனகல் செய்தி நிறுவனமான APS இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
செனகல் உள்துறை அமைச்சின் தகவலின்படி, இச்சம்பவத்தில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். காணாமல் போனவர்களின் சரியான எண்ணிக்கை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குடியேற்றவாசிகளுக்கு உதவும் Boza Fii அமைப்பின் நிறுவனர் சாலியோ டியூப் (Saliou Diouf) தெரிவிக்கையில், இதுவரை மீட்கப்பட்ட அனைத்து சடலங்களும் செனகல் நாட்டவர்களுடையவை எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்பெயினைச் சேர்ந்த குடியேற்ற உரிமைகள் அமைப்பான வோக்கின் போர்டர்ஸ் (Walking Borders) வெளியிட்டுள்ள தகவலின்படி, 2026 ஜனவரி முதல் மே மாதம் வரை கேனரி தீவுகளை நோக்கிய அட்லாண்டிக் கடல் வழிப் பயணத்தில் 635 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாம் கண்காணிக்கும் குடியேற்றப் பாதைகளில் இந்தப் பாதையே அதிக உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இச்சோக சம்பவம் தொடர்பில் செனகல் ஜனாதிபதி பஸிரூ டியோமாய் ஃபாயே (Bassirou Diomaye Faye) உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆபத்தான கடல் பயணங்களைத் தவிர்க்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ள அவர், ஆட்கடத்தல் வலையமைப்புகளை முறியடிப்பதற்கும் இளைஞர்களுக்கு உள்நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என X தளத்தின் ஊடாக உறுதியளித்துள்ளார்.










