உறவினர் ஒருவரின் மகளான 5 வயது சிறுமியின் காணொளியை, சிறுமியின் பெற்றோரின் அனுமதியின்றி பொதுவான Snapchat கணக்கில் பதிவிட்ட பெண்ணுக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், தண்டனையைத் தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு கடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த காணொளி 11,000க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள நிலையில், சிறுமியின் தனியுரிமை மற்றும் உளவியல் நலன் தொடர்பில் இந்தச் சம்பவம் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப நிகழ்வொன்றின்போது ஐந்து வயது சிறுமி உணவு வகையொன்றின் பெயரைத் தவறாக உச்சரித்து நகைச்சுவையாகப் பேசியுள்ளார். இதனால் அங்கிருந்தவர்கள் சிரித்துள்ளனர். இதனை உறவினரான குறித்த பெண் காணொளியாகப் பதிவு செய்து பின்னர் தனது Snapchat கணக்கில் பதிவிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து காணொளி ஏனைய சமூக ஊடகத் தளங்களிலும் பரவியதுடன், சிறுமி பொதுமக்களின் கவனத்திற்குள்ளாகியுள்ளார்.
இதனைக் கண்ட சிறுமியின் தந்தை, தனது அனுமதியின்றி மகளின் காணொளி பொதுவெளியில் பகிரப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். சிறுமியின் தனியுரிமை மற்றும் உளவியல் நலனுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கவலை வெளியிட்ட அவர், சம்பவம் தொடர்பில் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் சட்டங்களின் கீழ் இரு குற்றச்சாட்டுகள்
விசாரணைகளைத் தொடர்ந்து, சிறுமியின் அனுமதியற்ற காணொளியை இணையவழியில் வெளியிட்டமை மற்றும் சிறுமியைத் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் அல்லது அவரது உளவியல் பாதுகாப்பைப் பாதிக்கக்கூடிய நடவடிக்கையில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுகள் குறித்த பெண்ணுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்காக இரண்டு கூட்டாட்சி சட்டங்களின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
- வதந்திகள் மற்றும் இணையக் குற்றங்களைத் தடுப்பதற்கான 2021ஆம் ஆண்டின் 34ஆம் இலக்க கூட்டாட்சி சட்ட ஆணை.
- குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான 2016ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க கூட்டாட்சி சட்டம். இது பொதுவாக ‘வதீமா சட்டம்’ (Wadeema’s Law) என அழைக்கப்படுகிறது.
சிறுமியின் காணொளியை அனுமதியின்றி இணையத்தில் வெளியிட்டமை மற்றும் அவரது உணர்வு ரீதியான, உளவியல் நலனுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஒரு மாத சிறைத்தண்டனை மற்றும் நாடு கடத்தல்
நீதிமன்ற விசாரணையின்போது, குறித்த பெண் காணொளியைப் பதிவு செய்து வெளியிட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். எனினும், சிறுமியை வேண்டுமென்றே கேலி செய்து துன்புறுத்தும் நோக்கில் செயற்படவில்லை என மறுத்துள்ளார்.
தனது Snapchat கணக்கு பொதுப் பயன்பாட்டில் இருந்ததாகவும், காணொளியைப் பதிவேற்றிய பின்னர் அது தனது கட்டுப்பாட்டை மீறி சமூக ஊடகங்களில் பரவியதாகவும் அவர் வாதிட்டுள்ளார்.
எனினும், பொலிஸ் அறிக்கைகள், ஏனைய சாட்சியங்கள் மற்றும் குற்றத்தை ஒப்புக்கொண்ட அவரது வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையில் காணொளியைப் பதிவு செய்து வெளியிட்டதற்கான பொறுப்பு அவரையே சாரும் என நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
தீங்கு விளைவிக்கும் நோக்கம் இல்லாவிட்டாலும், உரிய அனுமதியின்றி சிறுவர் ஒருவரின் புகைப்படம் அல்லது காணொளியைப் பகிர்வது குற்றமாக அமையலாம் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், தனது Snapchat கணக்கு பொதுப் பயன்பாட்டில் இருந்தமையைக் காரணமாகக் கூறி சட்டப் பொறுப்பிலிருந்து விலக முடியாது என்ற பெண்ணின் வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இதனையடுத்து, குறித்த பெண்ணுக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு கடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
காணொளியைப் பகிர்ந்தவர்களுக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்
Bin Suwaidan Advocates and Legal Consultants நிறுவனத்தின் சட்டத்தரணி ரஷீத் பின் சுவைதான் (Rashid Bin Suwaidan) இந்தச் சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், குடும்ப நிகழ்வொன்றில் சாதாரணமாகப் பதிவு செய்யப்படும் காணொளிகூட சமூக ஊடகங்களில் பகிரப்படும்போது பாரதூரமான சட்டப் பிரச்சினையாக மாறக்கூடும் என எச்சரித்துள்ளார்.
மேலும், காணொளியைப் பதிவு செய்த நபர் மட்டுமன்றி, அதனை முதலில் பதிவேற்றியவர் மற்றும் பின்னர் மீண்டும் பகிர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் தமது ஈடுபாட்டின் அடிப்படையில் சட்டப் பொறுப்புக்கு உள்ளாகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஒருவரைக் காணொளி அல்லது புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி வழங்குவது, அதனைப் பொதுவெளியில் வெளியிடுவதற்கான அனுமதியாகக் கருதப்பட முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு உதாரணமாக, ஒருவரின் வாகனத்தைப் புகைப்படம் எடுக்க அனுமதி வழங்குவது, அந்தப் புகைப்படத்தைப் பொதுவெளியில் பகிர்வதற்கான உரிமையை வழங்காது எனவும், குறிப்பாக வாகனத்தின் பதிவு இலக்கம் அதில் வெளிப்படும் பட்சத்தில் இது முக்கியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதே கொள்கை தனிநபர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளுக்கும் பொருந்தும். ஒருவர் புகைப்படம் எடுக்கப்படுவதற்கோ அல்லது காணொளியில் பதிவு செய்யப்படுவதற்கோ இணங்குவது, அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்வதற்கான அனுமதியாகாது என அவர் விளக்கியுள்ளார்.
சிறுவர்களின் புகைப்படங்களைப் பகிர்வது தொடர்பில் எச்சரிக்கை
சிறுவர்களின் தனியுரிமை, கண்ணியம் மற்றும் உளவியல், உணர்வு ரீதியான நலன்களைப் பாதுகாக்கும் வதீமா சட்டத்தின் முக்கியத்துவத்தை இந்தச் சம்பவம் மீண்டும் எடுத்துக்காட்டுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மற்றொருவரின் வேண்டுகோளின் பேரில் பதிவேற்றப்பட்ட உள்ளடக்கமாக இருந்தாலும், தமது சமூக ஊடகக் கணக்குகள் ஊடாகப் பகிரப்படும் உள்ளடக்கங்களுக்கு அதன் உரிமையாளர்கள் சட்ட ரீதியான பொறுப்பை ஏற்க நேரிடலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர் அல்லது சட்டபூர்வ பாதுகாவலரின் உரிய அனுமதியின்றி சிறுவர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பகிர்வது பாரதூரமான சட்ட விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
அத்தகைய உள்ளடக்கங்களை மற்றவர்களுக்கு அனுப்புபவர்கள், மீண்டும் பதிவிடுபவர்கள் மற்றும் வேறு வழிகளில் பரப்புபவர்களும் தமது ஈடுபாட்டைப் பொறுத்து சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறவினர்களால் சாதாரண நகைச்சுவையாகவோ அல்லது குடும்பத்திற்குள் இடம்பெற்ற சங்கடமான தருணமாகவோ கருதப்படும் ஒரு சம்பவம், இணையத்தில் பகிரப்பட்டு பரவலான பின்னர் சிறுவர் ஒருவருக்கு பொதுவெளியில் அவமானத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தக்கூடும்.
எனவே, இணையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் சிறுவர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதில் பெற்றோர், உறவினர்கள் மற்றும் சமூக ஊடகப் பயனர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
காணொளியில் ஒரு சிறுவர் சிரித்துக்கொண்டோ மகிழ்ச்சியாகவோ காணப்படுவது, தனது புகைப்படம் அல்லது காணொளியைப் பொதுவெளியில் பகிர்வதற்கு அவர் அனுமதி வழங்கியுள்ளார் என்று அர்த்தமல்ல என சட்டத்தரணி ரஷீத் பின் சுவைதான் தெரிவித்துள்ளார்.










