ஈரானுக்கு எதிரான போர் இராணுவ ரீதியாக ஏறத்தாழ முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கத்தார் பிரதமருடனான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுக்கு எதிராக மீண்டும் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் தற்போதைக்கு தென்படவில்லை என்றும், தெஹ்ரானுடனான பேச்சுவார்த்தைகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஊடகவியலாளர்களிடம் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும், நிலைமையில் மாற்றம் ஏற்பட்டால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராக இருப்பதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
“இந்த மோதல் முடிவுக்கு வருவதற்கான சாதகமான நகர்வுகளை நாம் காண்கிறோம். இது மிக விரைவில் முடிவுக்கு வரும் என நான் கருதுகிறேன். இருப்பினும், இதற்கு எந்தவிதமான உத்தரவாதத்தையும் வழங்க முடியாது” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் தொடர்பான தற்போதைய நிலைமைகள் குறித்து கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானியுடன் கலந்துரையாடியதாகவும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது Truth Social சமூக வலைத்தளப் பதிவில் கருத்து வெளியிட்டுள்ள அவர், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட பிராந்திய நாடுகள் தற்போதைய நிலைமையைத் தொடர விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
கடற்படை முற்றுகை மற்றும் ‘ஒப்பரேஷன் அயர்ன் கேட்’ (Operation Iron Gate) நடவடிக்கை உள்ளிட்ட தற்போதைய ஏற்பாடுகளைத் தொடர்வதற்கு இந்த நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, ஈரான் அணுவாயுதங்களைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கக் கூடாது என்பதில் பிராந்திய நாடுகள் அனைத்தும் ஒருமித்த நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“ஈரான் அணுவாயுதத்தை வைத்திருக்க முடியாது என்பதில் அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். இது பேச்சுவார்த்தைக்கு உட்பட்ட விடயமல்ல” என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
போரை அதிகாரபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவருவதாக இதுவரை அறிவிக்காதது ஏன் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ட்ரம்ப், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளின் நீண்டகாலப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் ஈரானை குறிப்பிடத்தக்களவில் பலவீனப்படுத்தியுள்ளதாகவும், இதன் காரணமாக ஆறு மாதங்களுக்கு முன்னர் இருந்ததைவிட இஸ்ரேல் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் தற்போது பாதுகாப்பான நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஆகியோருடனான கலந்துரையாடல்கள் சாதகமாக அமைந்ததாக கத்தார் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை மற்றும் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தக்கூடிய உடன்பாட்டை எட்டுவதற்காக அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டதாக அவர் தனது X சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இராஜதந்திர முயற்சிகள் குறித்த நம்பிக்கையால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி
இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதலுக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு காணப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், திங்கட்கிழமை சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, பிரென்ட் (Brent) ரக மசகு எண்ணெயின் விலை 5.9 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து ஒரு பீப்பாய் 92.57 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
அதேவேளை, அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) ரக மசகு எண்ணெயின் விலை 4.4 சதவீதத்தால் குறைந்து ஒரு பீப்பாய் 86.85 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
ஈரானுக்கு எதிராக மேலதிக இராணுவத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பதாக ட்ரம்ப் வெளியிட்ட கருத்துகளைத் தொடர்ந்து இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.










