கடுமையான பாதுகாப்பு மற்றும் உயிராபத்து அபாயங்கள் நிலவும் நாடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள 23 நாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கும் பயணிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள பயண எச்சரிக்கையில், மிக உயர்ந்த எச்சரிக்கை நிலையான நிலை 4 – பயணம் செய்ய வேண்டாம் (Level 4 – Do Not Travel) என்ற பட்டியலில் இந்த நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஆப்கானிஸ்தான், பெலாரஸ், புர்கினா பாசோ, மியன்மார், மத்திய ஆபிரிக்கக் குடியரசு, சாட், கொங்கோ ஜனநாயகக் குடியரசு, ஹெய்ட்டி, ஈரான், ஈராக், லெபனான், லிபியா, மாலி, நைஜர், வட கொரியா, ரஷ்யா, சோமாலியா, தெற்கு சூடான், சூடான், சிரியா, உகண்டா, உக்ரைன் மற்றும் யேமன் ஆகிய 23 நாடுகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆயுத மோதல்கள், பயங்கரவாதத் தாக்குதல்கள், கடத்தல்கள், உள்நாட்டுக் கலவரங்கள் மற்றும் ஏனைய பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாகப் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய நாடுகளுக்கே இவ்வாறான நான்காம் நிலை பயண எச்சரிக்கை விடுக்கப்படுவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்கப் பிரஜைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே குறித்த நாடுகளில் தங்கியிருப்பவர்கள் பாதுகாப்பான சூழ்நிலை நிலவும்போது அங்கிருந்து வெளியேறுவது குறித்துப் பரிசீலிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன், சில நாடுகளில் அவசரநிலைகள் ஏற்படும்போது அமெரிக்க அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய உதவிகள் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த 23 நாடுகளுக்குமான பயண எச்சரிக்கைகள் அனைத்தும் புதிதாக வெளியிடப்பட்டவை அல்ல எனவும், ஒவ்வொரு நாட்டுக்குமான பாதுகாப்பு நிலைமைகளைப் பொறுத்து வெவ்வேறு காலப்பகுதிகளில் அவை மீளாய்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வெளிநாட்டுப் பயணங்களைத் திட்டமிடுவதற்கு முன்னர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறித்த நாடுகளுக்கான சமீபத்திய பயண எச்சரிக்கைகளைப் பரிசோதிக்குமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.











