வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில், ஊதிய உயர்வு கோரி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் முன்னெடுத்துவரும் வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்கள் காரணமாக வங்கதேசத்தில் சுமார் 150 ஆடைத் தொழிற்சாலைகள் தற்காலிகமாகச் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளன.
சவார், அஷுலியா மற்றும் காஸிபூர் உள்ளிட்ட முக்கிய ஆடை உற்பத்தி மையங்களில் இந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதால், உற்பத்தி மற்றும் ஏற்றுமதிப் பொருட்களின் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது 12,500 டாக்காவாக உள்ள மாதாந்த குறைந்தபட்ச ஊதியத்தை 30,000 டாக்காவாக அதிகரிக்க வேண்டும் எனத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தற்போதைய ஊதியத்தில் சுமார் 140 சதவீத அதிகரிப்பாகும்.
கடந்த வார இறுதியில் போராட்டங்கள் தீவிரமடைந்ததுடன், தொழிலாளர்கள் முக்கிய வீதிகளை மறித்து தொழிற்சாலைகளுக்கு முன்னால் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காஸிபூர் பகுதியில் டாக்கா – டாங்கைல் நெடுஞ்சாலையை சுமார் ஒரு மணிநேரம் போராட்டக்காரர்கள் மறித்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் தலையிட்டு போக்குவரத்தைச் சீரமைத்துள்ளனர்.
வங்கதேச ஊடகங்களின் தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை 121 தொழிற்சாலைகளில் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதுடன், மேலும் 65 தொழிற்சாலைகள் அந்நாட்டின் தொழிலாளர் சட்டங்களின் கீழ் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தொடர்ச்சியான அமைதியின்மை காரணமாகப் பாதிக்கப்படும் தொழிற்சாலைகள், தொழிலாளர் சட்டத்தின் ‘வேலை இல்லை, ஊதியம் இல்லை’ என்ற விதியின் கீழ் காலவரையறையின்றி மூடப்படக்கூடும் என ஆடை உற்பத்தியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
உணவு, தங்குமிடம், போக்குவரத்து மற்றும் சுகாதாரப் பராமரிப்பு உள்ளிட்ட அத்தியாவசியச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், தற்போதைய ஊதியம் தமது வாழ்க்கைச் செலவுகளை ஈடுசெய்யப் போதுமானதாக இல்லை எனத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், குறைந்தபட்ச ஊதியத்தை மறுபரிசீலனை செய்வதற்காக வங்கதேச அரசாங்கம் ஊதிய நிர்ணய சபையொன்றை அமைத்துள்ளது. இதில் தொழிலாளர் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்கள் பங்கேற்று கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றனர்.
சுமார் 40 இலட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதுடன், வங்கதேசத்தின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் ஆடைத் தொழில்துறையில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி சர்வதேச சந்தையிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச ஆடைச் சந்தையில் இலங்கையின் முக்கிய போட்டி நாடுகளில் ஒன்றாக வங்கதேசம் திகழ்கின்ற நிலையில், அந்நாட்டின் ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ஏற்படும் பாதிப்புகள் இரு நாடுகளுக்கும் இடையிலான போட்டித்தன்மையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.










